சென்னையில் ஆட்டோ கட்டணத்தை மறுசீரமைக்க பரிசீலனை.!போக்குவரத்து ஆணையர் வெளியிட்ட முக்கிய தகவல்
வாடிக்கையாளர்களுக்கு குறைந்த செலவையும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தரகு கட்டணமின்றி நிறைந்த வருமானத்தையும் தரும் நம்ம யாத்ரி ஆட்டோ செயலி சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
நம்ம யாத்ரி- ஆட்டோ சேவை
சென்னை எழும்பூரில் உள்ள நட்சத்திர விடுதியில் ONDC எனப்படும் டிஜிட்டல் வர்த்தகத்தின் திறந்த நெட்வொர்க் - இன் ஒரு பகுதியான ஆட்டோ புக்கிங் செயலி நம்ம யாத்ரியை போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் சண்முக சுந்தரம் அறிமுகம் செய்துவைத்தார். இதில் இணைந்த ஆட்டோக்களை கொடியசைத்து தொடங்கியும் வைத்தார். அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களால் மேம்படுத்தப்பட்ட நம்ம யாத்ரி செயலி, பயணிகளுக்கு குறைந்த செலவில் வசதியான போக்குவரத்தை வழங்கும். அதேநேரம், இந்த செயலி மூலம் இயங்கும் ஆட்டோக்களுக்கு தரகு கட்டணம் வழங்க வேண்டிய தேவை இல்லாததால் ஓட்டுனர்கள் அதிக வருவாய் ஈட்ட முடியும்.
சிஎம்டிஏ எல்லை அதிகரிப்பு
நம்ம யாத்ரி செயலியில் சுமார் 10,000 ஓட்டுநர்கள் ஏற்கனவே இணைந்துள்ள நிலையில், அடுத்த 6 மாதங்களில் 1 லட்சம் ஓட்டுநர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளது. மேலும் விரைவில் தமிழ்நாட்டின் பிற நகரங்களுக்கும் இந்த சேவை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னைக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலியில் வள்ளுவர் கோட்டம், அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா, பிர்லா கோளரங்கம், கலங்கரை விளக்கம், டைடல் பார்க், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை போன்ற முக்கிய இடங்களுக்கு தமிழில் தொடர்பு கொள்ள முடியும் நம்ம யாத்ரி ஆட்டோ செயலி அறிமுக விழாவில் பேசிய போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் சண்முக சுந்தரம், சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகப்பெரிய சாவாலாக உள்ளது என்றும், சிஎம்டிஏ வின் எல்லை வரையறை விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியனார்.
ஆட்டோ கட்டணம் மறுபரிசீலனை
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தின் அரக்கோணம் தாலுகா வரை சி.எம்.டி ஏ தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது என கூறினார். இந்நிலையில் சென்னையில் அனுமதி பெற்ற ஆட்டோக்கள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், ராணிபேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்குள் சென்று வர முடியும் என்றார். மேலும் 2013 ஆம் ஆண்டு அரசு நிர்ணயித்த ஆட்டோ கட்டணம் தற்போது வரை வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், ஆட்டோ கட்டண மறு சீரமைப்பு அரசின் பரிசீலனையில் உள்ளது என்றார்.
இதையும் படியுங்கள்