திமுக அரசை கண்டித்து அதிமுக வரும் 9ம் தேதி தாம்பரத்தில் மாபெரும் போராட்டத்தை அறிவித்துள்ளது.

ADMK Protest Against DMK Govt! திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 9ம் தேதி தாம்பரத்தில் போராட்டம் நடைபெற உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், 'திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தமிழகத்தின் ஜீவாதார உரிமைகள் பறிபோகும் அபாய நிலை தொடர்கதையாக உள்ளது. அதேபோல், தமிழ் நாட்டில் மக்கள் நலன்களை பாதிக்கும் செயல்களைத் தடுத்து நிறுத்துவதற்கு திராணியற்ற அரசாக விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு இருந்து வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.

திமுக ஆட்சியில் பாழான ஏரி

2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்று, ஆட்சி முடிவடைய இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையிலும், கீழ்கட்டளை பகுதியில் மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. அதிமுக ஆட்சியில் கீழ்கட்டளை பெரிய ஏரியில் முறையாக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு, வெளிப்புற கால்வாய் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. ஆனால், நிர்வாகத் திறனற்ற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் பெயிலியர் அரசின் அலட்சியப் போக்காலும், முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினாலும் ஏரியில் கழிவு நீர் கலந்து, ஏரி முழுவதும் ஆகாயத் தாமரை கொடிகள் சூழ்ந்துள்ளது. இதனால் ஏரி நீர் பாழானது மட்டுமல்ல. சுற்று வட்டார நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு மக்கள் பயன்படுத்த முடியாத அளவில் உள்ளது. மக்களின் சுகாதாரமும் பாதிப்படைந்துள்ளது.

தாம்பரத்தில் சுகாதார சீர்கேடு

தாம்பரம் மாநகராட்சி முழுவதும், குறிப்பாக கீழ்கட்டளை பகுதியில் குப்பைகள் முறையாக அள்ளப்படாததால், சாலைகள் முழுவதும் குப்பைகள் பரவி சுகாதாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. கீழ்கட்டளை முழுவதும் தெரு நாய்களின் தொல்லைகள் அதிகமாக உள்ளது. பொதுமக்கள் பகலிலேயே தனியாக நடமாட பயப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எங்கள் ஆட்சியில் கட்டப்பட்ட ஆதரவற்றோர் இல்லம். விடியா திமுக ஆட்சியில் சரிவர பராமரிக்கப்படாததன் காரணமாக, அதில் வசிப்போர் மிகுந்த துயரத்தில் உள்ளனர்.

பெவிலியர் மாடல் அரசு

மக்களின் அடிப்படைத் தேவைகள் முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில், சொத்துவரி உயர்வு, குடிநீர், கழிவுநீர் கட்டண உயர்வு, குப்பைவரி ஆகியவை பல மடங்கு உயர்ந்துள்ளது. மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தருவதில் சிறிதும் அக்கறை இல்லாமல் இருந்து வரும் விடியா திமுகவின் ஸ்டாலின் மாடல் பெயிலியர் அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

தாம்பரம் மாநகராட்சி, மண்டலம் 2 கீழ்கட்டளை பகுதி வாழ் மக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிறைவேற்ற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்தி, அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், கீழ்கட்டளை பகுதிக் கழகத்தின் சார்பில், 9.9.2025 செவ்வாய்க் கிழமை மாலை 4 மணியளவில், 'கீழ்கட்டளை பெரிய தெருபிள்ளையார் கோவில் சந்திப்பு' அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

பொதுமக்கள் கலந்து கொள்ள வலியுறுத்தல்

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தலைமையிலும், செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் சிட்லபாக்கம் ச. ராசேந்திரன் முன்னிலையிலும் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.