தமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு: மாநிலங்களவையில் விவாதிக்க அதிமுக நோட்டீஸ்!
தமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு குறித்து விவாதிக்க மாநிலங்களவையில் அதிமுக நோட்டீஸ் அளித்துள்ளது

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 21ஆம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ள கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே, மணிப்பூர் வன்முறை தொடர்பாக இரு அவைகளிலும் ஆளும் பாஜக அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாள், மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதில் ஒரு பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். எனவே, இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் பிரதானமாக கையில் எடுத்துள்ளன.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதித்து பிரதமர் மோடி இரு அவைகளிலும் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக அவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்து விட்டு விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் வைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளன.
ஆனால், மணிப்பூர் விவகாரம் குறித்து குறுகிய கால விவாதம் நடத்த தயாராக இருப்பதாகவு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த விவகாரத்தில் பதிலளிப்பார் எனவும் ஆளும் பாஜக அரசு தெரிவித்துள்ளது. இதனை ஏற்க எதிர்க்கட்சிகள் மறுப்பு தெரிவித்து வருகின்றன. இதனால், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் முடங்கியுள்ளது.
No confidence motion: பிரதமர் மோடி அன்றே கணித்தார்; வைரலாகும் வீடியோ!!
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு குறித்து விவாதிக்க மாநிலங்களவையில் அதிமுக நோட்டீஸ் அளித்துள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதாகவும், அது குறித்து விவாதிக்க கோரியும் அதிமுக சார்பில் எம்.பி. சி.வி.சண்முகம் மாநிலங்களவையில் நோட்டீஸ் அளித்துள்ளார்.
அண்மையில் நடந்த வருமானவரித்துறை சோதனையின் போது மத்திய அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மத்திய அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து குறுகிய கால விவாதம் நடத்தவும் அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னதாக, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்குவங்கம், பீகார் ஆகிய எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை பற்றி ஆளும் பாஜக குரல் எழுப்பி வருகிறது. இது தொடர்பாக, விதி எண் 176இன் கீழ் குறுகிய கால விவாதம் நடத்த பாஜக எம்.பி.க்கள் நோட்டீஸ் அளித்துள்ளனர். ஆனால், மணிப்பூர் விவகாரத்தை திசைதிருப்பும் இந்த முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு குறித்து விவாதிக்க மாநிலங்களவையில் அதிமுக நோட்டீஸ் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.