ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அப்போது, தமிழக அரசு சார்பில், மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் கார்டு தாரர்களுக்கு இலவச அரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, கரும்பு, வேட்டி - சேலை  ஆகியவை வழங்கப்படுவது வழக்கம்.

வரும் 14ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் கடந்த 2 நாட்களுக்கு முன் இலவச பொருட்கள் அனுப்பப்பட்டுவிட்டன. இதைதொடர்ந்து வேட்டி, சேலை வழங்கும் பணி நடந்து வருகிறது.

தாம்பரம் கல்யாண் நகர் 4வது தெருவில் ரேஷன் கடை (கடை எண் கே.டி.0191) அமைந்துள்ளது. இங்கு 1400 கார்டு தாரர்கள், குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில் இந்த ரேஷன் கடையில், அரசு சார்பில் இலவச வேட்டி, சேலை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதையறிந்ததும், காலை 6 மணி முதல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சுமார் 10 மணியளவில் கடை ஊழியர்கள், வந்தனர்.

சிறிது நேரத்தில், முன்னாள் அமைச்சர் சின்னய்யாவின் ஆதரவாளரான அதிமுக நகர செயலாளர் கூத்தன் தலைமையில் வெங்கடேசன், சுரேஷ்பாபு, ஆறுமுகம் ஆகியோர் ரேஷன் கடைக்கு சென்றனர்.

“கட்சியின் நிர்வாகிகள் நாங்கள்தான், பொதுமக்களுக்கு இலவச பொருட்களை வழங்குவோம்” என்றனர். அப்போது, அங்கு வந்த அதிமுக எதிர் கோஷ்டியான மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் ஆதரவாளர்கள் முன்னாள் நகர மன்ற தலைவர் கரிகாலன், முன்னாள் கவுன்சிலர் மஞ்சுளா சந்திரசேகர் உள்பட சிலர் சென்றனர்.

“தற்போது மாவட்ட செயலாளராக இருப்பவர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், அவரது ஆதரவாளர்களான நாங்கள் தான் இலவச பொருட்களை வழங்குவோம்” என தகராறு செய்தனர். இதனால் இருதரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவாகும் சூழல் நிலவியது.

தகவலறிந்து தாம்பரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அதிமுகவின் இரு கோஷ்டிகளிடம் சமரசம் பேசி, அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

அதிமுகவினரின் கோஷ்டி சண்டையால், இலவச பொருட்கள் வாங்க வந்த மக்கள், கடும் வெயிலில், மன உளைச்சலுடன் காத்திருந்தனர். அதேபோல் ரேஷன் கடை ஊழியர்களும், “யாராவது அடிச்சிக்கிட்டு, மீண்டு வந்து கொடுங்கப்பா…” என கூறியபடி கடையில் இருந்து சண்டையை வேடிக்கை பார்த்தனர்.