addition of sand quarries will be the opportunity for the government to robbery - anubumani
சேலம்
தமிழகத்தில் கூடுதலாக மணல் குவாரிகள் திறந்தால் அது ஆளுங்கட்சியினர் கொள்ளை அடிப்பதற்கு வாய்ப்பாகவே இருக்கும் என்று மருத்துவர் அன்புமணி ராமதாசு கூறினார்.
சேலத்தில் பாமக இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாசு எம்.பி. செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டியளித்தார்.
அதில், “தமிழகத்தில் விவசாயம், வேலைவாய்ப்பு, நீட் தேர்வு என பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. ஆனால், தமிழக அரசு அதை விட்டுவிட்டு மூடப்பட்ட சாராயக் கடைகளை திறக்கும் எண்ணத்தோடு செயல்பட்டு வருகிறது.
சாராயக் கடைகளுக்கு எதிராக போராடி வரும் மக்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதனை மீறி காவலாளர்கல் மக்கள் மீது அராஜகப் போக்கை கடைபிடித்து வருகிறன்றனர்.
தமிழகம் முழுவதும் கிராமங்கள், நகர்ப்புறப் பகுதிகளில் 24 மணி நேரமும் டாஸ்மாக் சாராயமும், போலி சாராயமும் கள்ளத்தனமாக விற்கப்படுகிறது. இதைத் தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
தமிழகத்தில் கூடுதலாக 70 மணல் குவாரிகளை திறக்க இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அவ்வாறு கூடுதலாக மணல் குவாரிகள் திறந்தால் ஆளுங்கட்சியினர் கொள்ளை அடிப்பதற்கு அது வாய்ப்பாகவே இருக்கும்.
குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். தினமும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது. அ.தி.மு.க. அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை. எனவே, தமிழகத்தில் ஒரு மணல் குவாரிகளைகூட திறக்க அனுமதிக்க மாட்டோம். அப்படி திறந்தால் எனது தலைமையில் பா.ம.க. போராட்டம் நடத்தும்.
82 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணையில் வண்டல் மண் எடுக்கும் பணியை சமீபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். ஆனால், முதல் நாள் மட்டும் விவசாயிகள் வண்டல் மண் எடுத்தார்கள். அதன்பிறகு டிராக்டருக்கு ரூ.100, ரூ.200 என்று வசூலிப்பதாக புகார்கள் வருகின்றன. ஏரி, குளங்களில் விவசாயிகளுக்கு வண்டல் மண் அள்ளுவதற்கு அனுமதிக்க வேண்டும். வண்டல் மண் எடுப்பதற்கு வெளிப்படை தன்மை வேண்டும்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகளுக்கு ரூ.37 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் விவசாயிகள் போராடிக் கொண்டே இருக்க வேண்டிய சூழல் உள்ளது.
உணவுப் பொருட்களுக்கு தனித்தனியாக 13 சட்டங்கள் இருந்தது. நான் மத்திய மந்திரியாக இருந்தபோது, ஒரே சட்டமாக கொண்டு வந்து மாநில அரசுகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டு உணவு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர்.
தற்போது பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் சர்க்கரை, பிளாஸ்டிக் முட்டை இருப்பதாக மக்கள் அச்சப்படுகிறார்கள். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளைக் கொண்டு ஆய்வு நடத்தி, பிளாஸ்டிக் அரிசி இருக்கிறதா? இல்லையா? என்பதை கண்டறிந்து மக்களின் அச்சத்தை தமிழக அரசு போக்க வேண்டும்.
ஜி.எஸ்.டி. வரி தமிழகத்திற்கு பாதகமாக இருக்கும். அதனை ஐந்து ஆண்டுகளில் மத்திய அரசு ஈடு செய்யும் என்று கூறியுள்ளது. கோவையில் கிரைண்டர் மற்றும் மோட்டார் தயாரிப்பு தொழில்கள், சேலத்தில் நெசவு உற்பத்தித் தொழில்கள் அதிகமாக உள்ளன. அதற்கு ஜி.எஸ்.டி. வரி அதிகமாக உள்ளதால் அந்த தொழில்களுக்கு பாதிப்பு ஏற்படும். இதற்கு தமிழகத்தில் உள்ள எம்.பி.க்கள் அனைவரும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தமிழகத்தின் தனித்துவத்துக்கு பாதிப்பு வராத வகையில் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நான் மத்திய மந்திரியாக இருந்தபோது, சேலத்தில் அதிநவீன சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கொண்டு வரப்பட்டது. ஆனால், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை என்று புகார்கள் வந்ததை தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. அதன்பிறகு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர்.
தற்போது சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை பராமரிப்பு பணி இல்லாமல் இருப்பதால் அதனை சீர் செய்யக்கோரி பா.ம.க. சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும்.
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்கு? என்பது குறித்து கட்சி முடிவு செய்யும்” என்று அன்புமணி ராமதாசு கூறினார்.
