மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நடிகர் விஜய், புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தொடர்சியாக பல நலத்திட்ட உதவிகளை நடிகர் விஜய் செய்து வருகிறார். அவரது மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி வருவதால், அவரது அரசியல் வருகை குறித்து பெரிதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு குறிப்பிட்ட இடங்களில் வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து உலக பசி தினத்தை முன்னிட்டு கடந்த மாதம் 28ஆம் தேதி தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் ‘தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்’ திட்டம் மூலம் ஏழைகளுக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் மதிய உணவு வழங்கினர்.
இதன் அடுத்தக்கட்டமாக, ஜூன் 17ஆம் தேதியன்று 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பெற்ற மாணவ மாணவிகளை நடிகர் விஜய் நேரில் சந்தித்து பரிசுகள் வழங்க உள்ளதாக விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நடிகர் விஜயின் உத்தரவுப்படி வரும் 17ம் தேதி அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்சன் சென்டரில் 2023ஆம் ஆண்டு நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தளபதி விஜய் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழ்கள், ஊக்கத்தொகை வழங்கி கௌரவப்படுத்த உள்ளார்.” என்று கூறப்பட்டுள்ளது.
காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்படும் செந்தில் பாலாஜி: உயர் நீதிமன்றம் அனுமதி!
இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு அறுசுவை விருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், நலத்திட்ட உதவிகளையும் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய் வழங்கும் விருது விழாவில் 6 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விருது பெறும் மாணவ, மாணவிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகளை மக்கள் இயக்க நிர்வாகிகள் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 10, 12 வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் பொதுவெளியில் பேனர், கட் அவுட் வைக்கக் கூடாது என மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து, மக்கள் இயக்க நிர்வாகிகள் நீலாங்கரை பகுதிகளில் உள்ள சுவர்களில் விளம்பரங்களை வரைந்து வருகின்றனர். விழாவில் கலந்துகொள்ளும் 5000 பேருக்கு காலை உணவு மற்றும் மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
