வறண்டு வரும் நதிகளை காப்பாற்றி, அதன் நீரோட்டத்தை அதிகரிக்க ஈஷா யோகா மையம் சார்பில் ‘நதிகளை மீட்போம்’ என்ற விழிப்புணர்வு இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக நாடு முழுவதும் விழிப்புணர்வு பேரணி நடைபெறுகிறது.

இந்த பேரணியை ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கிவாசுதேவ் கடந்த தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சத்குரு ஜக்கி வாசுதேவ்,

வளமான மண்ணுக்கு தேவையான தண்ணீர் இல்லையென்றால் நாடு, நாடாக இருக்காது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால்தான் நதிகளை இணைக்க முடியும் என கூறினார்.

நதிகளை இணைப்பது தொடர்பான பயணம் 16 மாநிலங்களை கடந்து செல்கிறது என்றும்  நதிகள் இணைப்பிற்கு நாம் மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மக்கள் இந்த பயணத்தில் அதிகமாக ஈடுபட வேண்டும். 125 கோடி மக்களில், 20 முதல் 50 கோடி மக்கள் இந்த பயணத்தில் ஈடுபட்டால், நதிகளை மீட்பதற்கு மத்திய–மாநில அரசுகளுக்கு தைரியம் வரும் என ஜக்கி கூறினார்.

இந்நிலையில் ஜக்கியின் இந்த நதிகளை மீட்போம் என்ற இயக்கத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ரத்த நாளங்கள் இல்லை என்றால் உடம்பு இயங்காது… நதிகள் பூமியின் ரத்தநாளங்கள்…அதை பாதுகாக்க வேண்டியது நமது கடமை என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் ஜீவநதிகளாக்க சத்குரு எடுத்துவரும் நடவடிக்கைகள் வெற்றி பெற வாழ்த்துவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.