Actor Kamal Hasan Mourning

திரைப்பட இயக்குநர் ஐ.வி. சசி, காலமானதை அடுத்து அவரது குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் கமல் டுவிட்டர் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

பிரபல திரைப்பட இயக்குநர் ஐ.வி. சசி, உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார் அவருக்கு வயது 69. தமிழ், மலையாளம், இந்தி உள்பட 150 படங்களுக்குமேல் இயக்கியவர் ஐ.வி.சசி. இவருடைய மனைவி நடிகை சீமா. கேரளாவைச் சேர்ந்த இவர், கலியல்ல கல்யாணம் என்ற படத்தின் மூலம் இயக்குனரானார். நடிகர் மம்முட்டியை அறிமுகப்படுத்தியவர் இவர்தான். 

தமிழில், நடிகர் கமல் ஹாசனை வைத்து, அலாவுதீனும் அற்புத விளக்கும், குரு, நடிகர் ரஜினி காந்தை வைத்து காளி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார்.

ஐ.வி. சசி, பல விருதுகளைப் பெற்றுள்ளார். கடந்த 1982 ஆம் ஆண்டு தேசிய விருதும், 2013 ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றார். அதுமட்டுமல்லாது மாநில விருதுகள், ஃப்லிம்ஃபேர் விருதுகள் பெற்றுள்ளார்.

ஐ.வி.சசி, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்தார். இந்த நிலையில், ஐ.வி.சசி இன்று காலமானார். அவரின் இறப்புக்கு, திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் கமல் ஹாசன், ஐ.வி.சசி இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது, நெடுங்கால நண்பரும் இணையிலா சினிமா தொழில் விற்பன்னருமான ஐ.வி.சசி காலமானார் என்றும் என் சகோதரி சீமா சசிக்கும், குடும்பத்தாருக்கும் அன்பும் அனுதாபமும் என்று பதிவிட்டுள்ளார்.