Action will continue the investigation - vijayapaskar appear again on the income tax office
கீதாலட்சுமியை தொடர்ந்து வருமான வரித்துறை விசாரணைக்காக 2 வது முறையாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை நுங்கபாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் முன் இன்று நேரில் ஆஜரானார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக பண பட்டுவாடா செய்தது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவமக்கள் கட்சி தலைவர் சரத்குமார், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழக துனைவேந்தர் கீதாலட்சுமி, முன்னாள் எம்.பி.சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோரின் வீடுகள் அலுவலகங்கள் உள்ளிட்ட 55 இடங்களில் வருமான வரித்துறையினர் ஏப்ரல் 7 மற்றும் 8 ஆம் தேதி அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் 5 கோடி ரூபாய் ரொக்கமும் வாக்காளர்களுக்கு 89 கோடி ரூபாய் விநியோகம் செய்யப்பட்டதற்கான ஆவணங்களும் சிக்கியதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வருமானவரித்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவமக்கள் கட்சி தலைவர் சரத்குமார், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழக துனைவேந்தர் கீதாலட்சுமி, முன்னாள் எம்.பி.சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டது.
முதற்கட்ட விசாரணை நிறைவு பெற்ற நிலையில், ஏப்ரல் 17 ஆம் தேதி அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் எனவும் விஜயபாஸ்கரும் கீதாலட்சுமியும் ஆஜராக வேண்டும் எனவும் வருமான வரித்துறை அறிவித்திருந்தது.
அதன்படி எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை கழக துணைவேந்தர் கீதாலட்சுமி இன்று மதியம் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் மீண்டும் நேரில் ஆஜரானார்.
அவரிடம் வருமான வரித்துறை விசாரணை நிறைவு பெற்ற நிலையில் அவரை தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் தற்போது வருமான வரித்துறையினர் முன்பு ஆஜராகியுள்ளார்.
