Asianet News TamilAsianet News Tamil

உச்சக்கட்ட பரபரப்பில் தமிழகம்... புயல் மற்றும் கனமழையை எதிர்கொள்ள ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவு..!

வட கடலோர மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டையில், டிசம்பர் 8-ம் தேதி, இரவு 11.30 மணி வரை தமிழகத்தின் வடகடலோர பகுதிகளில் 2.8 மீட்டர் முதல் 4.8 மீட்டர் வரை கடல் அலைகளின் உயரம் இருக்கும்.

Action orders to collectors to face storm and heavy rain..! minister kkssr ramachandran
Author
First Published Dec 8, 2022, 7:28 AM IST

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகும் புயல் சின்னம் மற்றும் கனமழை முதல் அதி கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என ஆட்சியர்களுக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் உத்தரவிட்டுள்ளார். 

இதுதொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- இந்திய வானிலை ஆய்வு மையம், தனது 07-12-2022 நாளிட்ட அறிவிக்கையில், நேற்று (06.12.2022) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவியிருந்த நன்கமைந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, பின்னர் மேலும் வலுவடைந்து இன்று (7.12.2022) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னையிலிருந்து சுமார் 770 கிலோ மீட்டர் தொலைவில் தென்கிழக்கு மற்றும் அதன் அருகில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவுகிறது என்று தெரிவித்துள்ளது. மேலும், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று புயல் சின்னமாக வலுவடைந்து, 08.12.2022 அன்று காலை வட தமிழக கடற்கரை அருகில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியை அடையக்கூடும் என்றும், பின்னர் அடுத்த 48 மணி நேரத்திற்கு தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும்  இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Action orders to collectors to face storm and heavy rain..! minister kkssr ramachandran

இதன் காரணமாக கன, மிக கனமழை மற்றும் அதி கனமழைப் பொழிவு ஏற்படும் பகுதிகள் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

08-12-2022

கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

09-12-2022

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மற்றும் திண்டுக்கல்  ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

10-12-2022

கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், நீலகிரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

11-12-2022

திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Action orders to collectors to face storm and heavy rain..! minister kkssr ramachandran

1. மீனவர்களுக்கான எச்சரிக்கை

டிசம்பர் 8-ம் தேதி, தென் மேற்கு வாங்கக் கடல் பகுதியில், 8-12-2022 காலை மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், இது அதிகரித்து 8-12-2022 மாலை முதல் 9-12-2022 காலை வரை மணிக்கு 80 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், தமிழக கடற்கரைப் பகுதிகளில், 8-12-2022 காலை முதல் மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், இது 8-12-2022 மாலை அதிகரித்து மணிக்கு 50 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும், மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும்,

டிசம்பர் 9-ம் தேதியன்று, தமிழக கடற்கரைப் பகுதிகளில், மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 50 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், டிச.10-ம் தேதியன்று, தமிழக கடற்கரை பகுதிகளில், மணிக்கு 50 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2. தரைக்காற்று குறித்த எச்சரிக்கை 

டிசம்பர் 8-ம் தேதியன்று, தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த தரைக் காற்று வீசக்கூடும் என்றும், டிசம்பர் 9-ம் தேதியன்று தமிழ்நாட்டின் வட கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் தரைக் காற்று வீசக்கூடும் என்றும் இது அதிகரித்து 10-11-2022 காலை வரை மணிக்கு 60 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும், தமிழ்நாட்டில் தென் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் தரைக் காற்று வீசக்கூடும் என்றும், இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரின் அறிவுரைகளின் படி பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

3. கடல் அலைச் சீற்றம் குறித்த எச்சரிக்கை

*  வட கடலோர மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டையில், டிசம்பர் 8-ம் தேதி, இரவு 11.30 மணி வரை தமிழகத்தின் வடகடலோர பகுதிகளில் 2.8 மீட்டர் முதல் 4.8 மீட்டர் வரை கடல் அலைகளின் உயரம் இருக்கும் என்பதால், மீனவர் குடியிருப்பு பகுதிகளில் மாவட்ட ஆட்சியரின் அறிவுரையின் படி பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

* தென் கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரியில், டிசம்பர் 8-ம் தேதி இரவு 11.30 மணி வரை தமிழகத்தின் தென்கடலோர பகுதிகளில் 2.7 மீட்டர் முதல் 3.6 மீட்டர் வரை கடல் அலைகளின் உயரம் இருக்கும் என்பதால், மீனவர் குடியிருப்பு பகுதிகளில் மாவட்ட ஆட்சியரின் அறிவுரையின் படி பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

புயல் சின்னம் தொடர்பாக (டிசம்பர் 6) ஒன்றிய அரசின் அமைச்சரவைச் செயலாளர் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் புயல் மற்றும் கனமழையினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தமிழக அரசின் தயார் நிலை குறித்தும் எடுத்துரைத்தார். தமிழக முதல்வரின் அறிவுரையின் பேரில் கனமழையை எதிர்கொள்ள பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

* கனமழையினை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் கூடுதல் தலைமைச் செயலர் / வருவாய் நிருவாக ஆணையர் அவர்களது கடித எண். இஇ1 (4) / 558 / 2022, நாள்: 07.12.2022 -ன் படி அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

* மேற்கு கடற்கரைப் பகுதியில் மீன் பிடிக்கச் சென்றுள்ள 543 மீன்பிடி படகுகள் பாதுகாப்பாக உள்ளன. ஆந்திரப்பிரதேச கடற்கரைப் பகுதிகளில் மீன் பிடிக்கச் சென்றுள்ள 43 தமிழக மீன்பிடி படகுகளில் உள்ள மீனவர்களுக்கு VHF, Sat Phones, Navtex, Navic மூலமாக புயல் சின்னம் குறித்த தகவல் தெரிவிக்கப்ட்டடுள்ளதைத் தொடர்ந்து, 31 படகுகள் பாதுகாப்பாக கரை சேர்ந்துள்ளன. எஞ்சிய 12 படகுகள் ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் துறைமுகத்திற்கு பாதுகாப்பாக சென்றடையும்.

* தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 390 வீரர்கள் அடங்கிய 12 குழுக்கள் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு விரைந்துள்ளன.

* பெருநகர சென்னை மாநகராட்சி பகுதி மற்றும் மாவட்டங்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புடைய பகுதிகளில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், சென்னையில் 169 நிவாரண மையங்களும், தாழ்வான பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 807 நீர் இறைப்பான்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

*  121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5,093 நிவாரண முகாம்களும் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் உள்ளன.

*  மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அளவிலான அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் இயங்குகின்றன.

*  கடலோரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 424 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு புயல் குறித்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

*  புயல், கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்கள் TNSMART செயலி மூலமாகவும், Twitter, Facebook உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாகவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Action orders to collectors to face storm and heavy rain..! minister kkssr ramachandran

4. பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகள்

*  பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க பல் துறை மண்டலக் குழுக்கள் அமைக்க வேண்டும்,

*  பலத்த காற்று காரணமாக விழும் மரங்களை உடனடியாக அகற்ற மர அறுப்பான்கள் மற்றும் இதர உபகரணங்களுடன் நடமாடும் குழுக்கள் அமைக்கவும், போதுமான அளவு உபகரணங்களை வைத்திருக்க வேண்டும்.

*  மின் கம்பங்கள், மின் கடத்திகள் ஆகியவற்றின் இருப்பு வைத்திருப்பதோடு, பாதிப்பிற்குள்ளாகும் மின் இணைப்புகளை சீரமைக்க குழுக்கள் அமைக்க வேண்டும்.

* மணல் மூட்டைகள், கம்பங்கள், அவசரகாலத்தில்  தேவையான மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும்.

*  பாதிப்பிற்குள்ளாகும் / தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.

* நிவாரண முகாம்களை தயாராக வைத்திருப்பதோடு, குடிநீர், கழிவறை வசதிகள் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்,

*  தங்குதடையின்றி குடிநீர் வழங்குவதற்கு போதுமான ஜெனரேட்டர்கள் வைத்திருக்க வேண்டும்.

*  பேரிடர் பாதிப்பிற்குள்ளாகும் இடங்களுக்கும், நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் சீரான போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

*  பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

* நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நபர்களுக்கும், பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கும் உணவு அளிக்கும் வகையில் சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

* அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு, நீர் வரத்து ஆகியவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். உபரி நீர் வெளியேற்றும் போது பொதுமக்களுக்கு உரிய முன்னறிவிப்பு வழங்க வேண்டும்.

* நெடுஞ்சாலை, நீர் வள ஆதாரத்துறை, மின் வாரியம், தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை உள்ளிட்ட துறைகள் களப்பணியாற்ற தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios