மோடியின் Road Show.!பள்ளிக்குழந்தைகள் பங்கேற்க வைத்த தலைமை ஆசியர் மீது நடவடிக்கை- பள்ளிக்கல்வித்துறை அதிரடி
பிரதமர் மோடி கோவையில் பங்கேற்ற வாகன பேரணி நிகழ்ச்சியில் தேர்தல் விதிமுறைகளுக்கு மீறி பள்ளி மாணவர்களை அழைத்து வந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
மோடியின் பேரணியில் பள்ளி மாணவர்கள்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் மோடி தமிழகத்தில் தொடர் பிரச்சார பயணங்களை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று மாலை கோவையில் சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகன பேரணி மேற்கொண்டார். அப்போது வழி முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் நின்றிருந்தனர். மேலும் பாஜக சார்பாக கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்தநிலையில், பள்ளி மாணவ மாணவிகளும் அதிகமான அளவு ஒரு இடத்தில் குவிந்து இருந்தனர். இந்த காட்சி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக தேர்தல் பிரச்சாரத்தில் மாணவர்களை பங்கேற்க வைத்தது குழந்தைகள் உரிமை மீறிய செயல் என்றும் தேர்தல் விதிகளுக்கு எதிரானது என்றும் புகார் தெரிவிக்கப்பட்டது.
தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை
இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கோவையில் பிரதமர் வாகன பேரணியில் பள்ளி மாணவர்களை பங்கேற்க வைத்தது ஸ்ரீ சாய் பாபா வித்யாலயம் பள்ளி என தெரியவந்தது. இதன் அடிப்படையில் பிரதமர் மோடியின் வாகன பேரணியில் மாணவர்களை பங்கேற்க வைத்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க அரசு உதவி பெறும் பள்ளியின் நிர்வாகத்திற்கு முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி உத்தரவிட்டார். மேலும் நடவடிக்கை எடுத்தது குறித்து 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்
திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் யார்.? திருமாவளவன் அறிவிப்பு