தமிழகத்தில் சிலைகள் மாயமாவது அதிசயமில்லை. அதேபோல் சிவாஜி சிலை திடீரென மாயமானதற்கு யாரும் ஆச்சர்யப்பட வேண்டியதில்லை. என திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் பேசினார்.

கடந்த திமுக ஆட்சியின் போது, சென்னை காமராஜர் சாலை, மெரினா கடற்கரை அருகே நடிகர் சிவாஜி சிலையை அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.

பின்னர், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், சிவாஜி சிலையால் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து சிலையை அகற்ற தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிவாஜி சிலையை அகற்ற உத்தரவிட்டது. அதற்கு, நடிகர் சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டவேண்டும். அந்த மணிமண்டபத்தில் இந்த சிலையை வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

அதன்பேரில் மணிமண்டபம் கட்டி முடித்து கடந்த சில நாட்களுக்கு முன் முழு பணிகளும் முடிவடைந்தது. ஆனால், இதுவரை திறக்கப்படவில்லை.

இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன் காமராஜர் சாலையில் இருந்த சிவாஜி சிலை, இரவோடு இரவாக திடீரென அகற்றப்பட்டது. இதனால், பொதுமக்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது.

சென்னை காமராஜர் சாலையில் இருந்த சிவாஜி சிலை திடீரென அகற்றப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. ஆனால், ஆச்சர்யப்பட செய்யவில்லை. ஏனென்றால், தமிழகத்தில் சிலைகள் மாயமாவது அதிசயம் இல்லை.

மறைந்த நடிகர் சிவாஜிக்கு, பத்ம விபூஷன் விருது வழங்க வேண்டும். இதற்கு, தமிழக அரசு உரிய ஆவண செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.