அப்துல் கலாமின் நினைவு நாள்…..பயணிகளை இலவசமாக ஏற்றிச் சென்று நினைவு கூர்ந்த ஆட்டோ டிரைவர்

அப்துல் கலாமை போற்றும் வகையில் அவரது  நினைவு நாளான இன்று பயணிகளிடம் பணம்  வாங்காமல் ஆட்டோவில் ஏற்றிச்சென்ற ஓட்டுனரின் செயல் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

சென்னை நந்தனம் தனியார் மருத்துவமனை அருகில் உள்ள ஆட்டோ ஸ்டான்டில் ஆட்டோ ஒன்றை வாடகைக்கு எடுத்து ஓட்டிவருபவர் கலையரசன்.

இவர் மறைந்த குடியரசு தலைவர் அப்துல்கலாமின் 2ம் ஆண்டு நினைவு தினமான இன்று காலை ஆட்டோ ஸ்டான்டிற்கு வந்தார்.

அவரிடம் பயணி ஒருவர் தேனாம்பேட்டை செல்ல வேண்டும் என்றார். அவரை அழைத்து கொண்டு சென்ற கலையரசன் இறக்கிவிடும் போது பயணி எவ்வளவு வேண்டும் என்று கேட்ட போது புன்னகையுடன் இன்று நான் யாரிடமும் பணம் வாங்குவதில்லை என்று கூறியுள்ளார்.

வியந்து போன பயணி ஏன் என்று கேட்ட போது ஆட்டோவின் பின்புறம் இருக்கும் கண்ணாடியில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கரை காண்பித்தார்.

அதில் நான் விட்டுச்சென்ற பணியினை தொடருங்கள் மாணவ செல்வங்களே என்ற அப்துல்கலாமின் வாசகம் இடம்பெற்றிருந்தது.

 மேலும் இன்று அப்துல்கலாமின் நினைவு தினம். அதனால் இலவமாக சேவை செய்வதாக கலையரசன் அப்பயணியிடம் கூறியுள்ளார். இதைக் கேட்ட பயணி நெகிழ்ந்துபோய் ஆட்டோ டிரைவர் கலையரசனை பாராட்டி விட்டு சென்றார்.

இதே போன்று இன்று நாள் முழுவதும் கலையரசன் பயணிகளிடம்  பணம் பெற்றுக்கொள்ளாமல் இலவசமாக  அழைத்து சென்றார். மேலும் ஆட்டோவில் பயணம் செய்யும்போது பயணிகளிடம் அப்துல் கலாமில் வழியை பின்பற்றுங்கள்  என்று அறிவுறுத்தினார்.

கலையரசனின் இந்த சமூக சிந்தனைக்கு ஆட்டோ உரிமையாளர் இன்று வாடகை வேண்டாம் என்று கூறியுள்ளாராம். இருவருக்கும் எவ்வளவு பெரிய மனது பாருங்கள்.

தேசத்திற்காக பாடுபட்டவரை நாம் மண்ணில் இழந்துள்ளோம் என்றால் அவரது நினைவுகள் நம்மை விட்டு அழியாது என்பது ஒருசிலரின் செயல்பாட்டில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.