நெய், வெண்ணெய் விலை உயர்வு: ஆவின் விளக்கம்!
நெய், வெண்ணெய் ஆகியவற்றின் விலை உயர்வு தொடர்பாக ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது

தமிழக அரசின் ஆவின் நிர்வாகம் பால், தயிர், வெண்ணெய், நெய், உள்ளிட்ட பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், ஆவின் நிறுவனம் நெய் மற்றும் வெண்ணெயின் விலைகளை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ஆவின் நெய் விலை லிட்டருக்கு 70 ரூபாயும், அரை லிட்டருக்கு 50 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ரூ.260க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த அரை கிலோ வெண்ணெய், 15 ரூபாய் அதிகரித்து, ரூ.275க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பண்டிகைக் காலங்கள் நெருங்கி வரும் நிலையில், ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆவின் நிர்வாகத்தின் இந்த விலை உயர்வுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், நெய், வெண்ணெய் ஆகியவற்றின் விலை உயர்வு தொடர்பாக ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “மிழ்நாடு முழுவதும் ஆவின் நிறுவனம் நாளொன்றுக்கு சுமார் 31 இலட்சம் லிட்டர் பாலும் மற்றும் 200 க்கும் மேற்பட்ட பால் உபபொருட்களை விற்பனை செய்து வருகிறது. ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் வகைகள் மிகுந்த தரத்துடன், குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று அதன் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் பண்டிகை காலங்களில் பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மாவட்ட ஒன்றியங்களில் உள்ள ஆலைகளின் திறன் மேம்படுத்தப்பட்டு, நெய் மற்றும் வெண்ணெய் வகைகளின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஆவின் நெய்யின் தற்போதுள்ள ஆயுட்காலத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது இந்திய அளவில் பால் மூலப்பொருட்களின் கொள்முதல் விலை தொடர்ந்து அதிகரித்தவாறு இருப்பதாலும் மற்றும் உற்பத்தி செலவும் அதிகரித்த காரணத்தால் நெய் மற்றும் வெண்ணெய் வகைகளின் விலை உயர்வு 14.09.2023 முதல் அமல்படுத்த இந்நிறுவனத்திற்கு அவசியம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு சந்தையில் உள்ள பிற நிறுவனங்களின் நெய் மற்றும் வெண்ணெய் வகைகளின் விலையை விட ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் வகைகளின் விலை மிகவும் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் தரமான ஆவின் பால் உபபொருட்களை பயன்படுத்தி சுமார் 4.5 இலட்சம் தமிழக பால் உற்பத்தியாளர்களின் நலனை மேம்படுத்த உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பிற மொழிகளை இழிவுபடுத்தும் அமித் ஷா: உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு!
மேலும், ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் வகைகள் இதர நிறுவனங்களின் விலையை ஒப்பீடு செய்யும்போது சுமார் 25 சதவீதம் விலை குறைவாக உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அத்துடன், ஆவின் நெய், வெண்ணெய் ஆகியவற்றின் விலைகள் இதர நிறுவனங்களோடு ஒப்பிடப்பட்டு அதன் பட்டியலையும் ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.