Asianet News TamilAsianet News Tamil

பிற மொழிகளை இழிவுபடுத்தும் அமித் ஷா: உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு!

இந்தி அல்லாத பிற மொழிகளை இழிவுபடுத்துவதை மத்திய அமைச்சர் அமித் ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

Amit Shah should stop denigrating languages other than Hindi slams udhayanidhi stalin smp
Author
First Published Sep 14, 2023, 4:44 PM IST

இந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த பேட்டியில், “இந்தியா பல ஆண்டுகளாக பல்வேறு மொழிகளின் நாடாக இருந்து வருகிறது. இந்தி எப்போதும் ஜனநாயக மொழியாக இருந்து வருகிறது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், பல்வேறு மொழிகளுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் மொழியாக இந்தி உள்ளது.” என்றார்.

அமித் ஷா இதுபோன்று பேசுவது இது முதன்முறை அல்ல. இதற்கு முன்னர் கடந்த 2019ஆம் ஆண்டு இந்தி திவாஸ் நிகழ்ச்சியில் பேசிய போதும் கூட, “நாட்டில் உள்ள அனைவரையும் ஒரு மொழியால் ஒருங்கிணைக்க முடியும் என்றால் அது அதிகமான மக்களால் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும்” என்று பேசி விமர்சனத்துக்குள்ளானார்.

மத்திய பாஜக அரசு, இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தியை திணித்து வருவதாக குற்றம் சாட்டப்படும் நிலையில், அமித் ஷாவின் சமீபத்திய பேச்சுக்கும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அந்த வகையில், இந்தி அல்லாத பிற மொழிகளை இழிவுபடுத்துவதை மத்திய அமைச்சர் அமித் ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மகளிர் உரிமைத் தொகை.. காஞ்சிபுரம் செல்லும் முதல்வர் - உங்க விண்ணப்பத்தின் ஸ்டேட்டஸ் என்ன? மெசேஜ் எப்போ வரும்?

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “"இந்தி தான் நாட்டு மக்களை ஒன்றிணைக்கிறது - பிராந்திய மொழிகளுக்கு அதிகாரமளிக்கிறது" என்று வழக்கம் போல தனது இந்தி மொழிப் பாசத்தை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பொழிந்துள்ளார். இந்தி படித்தால் முன்னேறலாம் என்ற கூச்சலின் மாற்று வடிவம் தான் இந்தக் கருத்து.” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

 

மேலும், தமிழ்நாட்டில் தமிழ் - கேரளாவில் மலையாளம். இவ்விரு மாநிலங்களையும் இந்தி எங்கே ஒன்றிணைக்கிறது? எங்கே வந்து அதிகாரமளிக்கிறது? எனவும் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “நான்கைந்து மாநிலங்களில் பேசப்படும் இந்தியை, ஒட்டு மொத்த இந்திய ஒன்றியத்தையும் ஒன்றிணைப்பதாக கூறுவது அபத்தமானது. இந்தியைத் தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என்று சுருக்கி இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும்.” உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios