aarthi scans: ஆர்த்தி ஸ்கேன்ஸ் ரெய்டில் ரூ.100 கோடி கணக்கில் வராத பணம்?
aarthi scans: பல்வேறு மாநிலங்களில் கிளைகள் நடத்திவரும் ஆர்த்தி ஸ்கேன்ஸ் மற்றும் டயாக்னஸ்டிக் மையத்தில் வருமானவரித்துறையினர் கடந்த 2 வாரங்களுக்கு முன் நடத்திய ரெய்டில் ரூ.100 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல்வேறு மாநிலங்களில் கிளைகள் நடத்திவரும் ஆர்த்தி ஸ்கேன்ஸ் மற்றும் டயாக்னஸ்டிக் மையத்தில் வருமானவரித்துறையினர் கடந்த 2 வாரங்களுக்கு முன் நடத்திய ரெய்டில் ரூ.100 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தகவலை தனியார் சேனல் ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளது. ஆனால், வருமானவரித்துறையினர் சார்பில் எந்தவிதமான தகவலும் இல்லை.
கடந்த 2000ம் ஆண்டு தொடங்கப்பட் ஆர்த்தி ஸ்கேன்ஸ் மையத்தை ரேடியாலஜிஸ்ட் பிரசன்னா விக்னேஷ்,ஆர்த்தி பிரசன்னா, அருண்குமார் கோவிந்தராஜன் ஆகியோர் குடும்பத்தினர் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் 45 மையங்களையும், 100க்கும் மேற்பட்ட மாதிரி சேகரிப்பு மையங்களையும் ஆர்த்தி ஸ்கேன்ஸ் கொண்டுள்ளது. தமிழகம், கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, டெல்லி என்சிஆர், புதுச்சேரி, கேரளா, மே.வங்கம் ஆகிய மாநிலங்களில் கிளைகள் உள்ளன
இந்நிலையில் சமீபத்தில் டாடா கேபிடல் நிறுவனம் ஆர்த்தி ஸ்கேன்ஸ் மையத்தில் முதலீடு செய்து பங்குகளை வாங்கியது. இதன் மதிப்பு ரூ.200 கோடி இருக்கும் எனத்தகவல்கள் தெரிவித்தன.
இந்தச் சூழலில் கணக்கில் வராமல், வரிஏய்ப்பு செய்துவருவதாக ஆர்த்தி ஸ்கேன்ஸ் மீது வருமானவரி்த்துறையினருக்கு புகார் பறந்தது. இதையடுத்து, கடந்த 7 மற்றும் 8ம் தேதிகளில் ஆர்த்தி ஸ்கேன்ஸ் மையத்தின் பல்வேறு கிளைகளில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர்.
சென்னையில் வடபழனி, அசோக் நகர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இயங்கி வரக்கூடிய ஆர்த்தி ஸ்கேன் நிறுவனம் மற்றும் மருத்துவர்களின் வீடுகளில் 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். இது தவிரஆர்த்தி ஸ்கேன்ஸ் மையம் செயல்படும் பல்வேறு மாநிலங்களிலும், அங்கு பணியாற்றும் மருத்துவர்கள் வீடுகளிலும் ரெய்டு நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்த ரெய்டு முடிவில் ஏராளமான ஆவணங்களை வருமானவரித்துறையினர் கைப்பற்றிச் சென்றதாக தகவல்கள் வெளியாகின. இதில் ஆர்த்தி ஸ்கேன் மையம் ரூ.100 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தனியார் செய்திசேனல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், இதுவரை வருமானவரித்துறை சார்பில் அதிகாரபூர்வ அறிக்கை வரவில்லை.