‘’விஜய் செல்லும் இடமெல்லாம் மக்கள் அலை அலையாகத் திரண்டனர். நாங்கள் பிரசாரம் செய்ய நல்ல இடம், மக்களுக்கு பாதுகாப்பு இதைத் தான் விஜய் கேட்டார்''
தவெக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தைரியம் இருந்தால் திமுக அரசு விஜய் மீது கை வைக்கட்டும் என்று திமுக அரசுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ''விஜய் மீது நடவடிக்கை எடுப்போம் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
விஜய் மீது கை வைத்து பாருங்கள்
தைரியம் இருந்தால் விஜய் மீது கைவைத்து பாருங்கள். அதிகாரம் இருந்தால் போலீஸ் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா? முதலில் விஜய் வீட்டுக்குள் செல்லுங்கள் பார்ப்போம். ஒட்டுமொத்த கல்லூரிகளில் படிக்கும் இளைஞர்களும் உங்கள் வீடு தேடி வருவார்கள். எங்களுக்கு பயம் இல்லை'' என்று தெரிவித்துள்ளார்.
வரலாற்றை பேசினால் தாங்க மாட்டீர்கள்
தொடர்ந்து பொதுக்குழுவில் பேசிய ஆதவ் அர்ஜுனா, ''கரூர் சம்பவத்துக்கு பிறகு திமுக செய்த சூழ்ச்சிகளை தன்னுடைய மெளன புரட்சியால் எதிர்கொண்டுள்ளார் விஜய். தவெக முடங்கி விட்டது. புஸ்ஸி ஆனந்த் ஓடி விட்டார். சி.டி.நிர்மல் குமார் ஓடி விட்டார் என அவதூறு பரப்பினார்கள். கலைஞர் கருணாநிதி கைது செய்தததை போலவா நாங்கள் ஓடினோம். வரலாற்றை பற்றி பேசினால் தாங்க மாட்டீர்கள்.
மன்னிப்பு கேட்கிறேன்
எங்களுக்கு மக்கள் இயக்கமாக இருக்கவும் தெரியும். உங்கள் சூழ்ச்சிகளை சுப்ரீம் கோர்ட் சென்று தூக்கி எறியவும் தெரியும். விஜய் என்ன தவறு செய்தார்? அவருக்கு ஏன் இவ்வளவு நெருக்கடி கொடுக்கிறீர்கள். 10 ஆண்டுகள் திமுகவுக்கு வேலை செய்ததற்காக நான் மக்களிடம் பாவ மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தேர்தலில் விஜய் கருப்பு, சிவப்பு சைக்கிளில் வந்து உங்களுக்கு ஆதரவு தெரிவித்தாரே அந்த நன்றி கூட இல்லையா?
ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்
விஜய் செல்லும் இடமெல்லாம் மக்கள் அலை அலையாகத் திரண்டனர். நாங்கள் பிரசாரம் செய்ய நல்ல இடம், மக்களுக்கு பாதுகாப்பு இதைத் தான் விஜய் கேட்டார். திமுக காசு கொடுத்து கூட்டம் கூட்டியது போல் இல்லாமல் மக்கள் எங்கள் கூட்டத்துக்கு அன்புடன் வந்தார்கள். முதல்வர் ஸ்டாலின் அவர்களே மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்யுங்கள். ஒட்டுமொத்த காவல்துறையும் செயலிழந்து விட்டது.
மக்கள் உயிரை வைத்து விளையாடாதீர்கள்
திமுக என்னும் ஊழல் குடும்பத்தை தூக்கியெறிய வந்துள்ளோம். சூழ்ச்சி செய்வது தான் அனுபவ அரசியல் என்றால் அந்த அரசியல் எங்களுக்கு தேவையில்லை. நாங்கள் மக்களுக்கு உண்மையாக இருந்து கொள்கிறோம். திமுக எங்களை கைது செய்து கொள்ளட்டும். ஆனால் மக்கள் உயிரை வைத்து விளையாடாதீர்கள்'' என்று கூறியுள்ளார்.
