aadhar pan card need on deepavali crackers bulk purchase

தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கிறது. பண்டிகையை என்ஜாய் பண்ண பட்டாசுகளை வாங்க ஒரு பட்டாளமே கிளம்பிக் கொண்டிருப்பார்கள். அவர்களில் ஹோல்சேல் கடைகளில் அல்லது குடோன்களில் நேரடியாகவே சென்று மொத்த விலையில் வாங்குபவர்களும் உண்டு. அவர்கள் இதுவரையில் எந்த பிரச்னையுமில்லாமல் வாங்கியிருப்பார்கள். ஆனால் இந்த முறை அவர்களுக்கு ஆதார் தேவைப்படும்! 

ஆம்... குடோன்களில் இருந்து வாடிக்கையாளர்கள் நேரடியாக பட்டாசுகள் வாங்க வேண்டுமென்றால், அவர்கள் தங்களின் ஆதார் எண், பான் எண் ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும் என பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அண்மையில் நாடு முழுதும் ஜிஎஸ்டி., வரிவிதிப்பு அமல்படுத்தப் பட்டது. இதன் பின்னர் அனைத்து வித பட்டாசு விற்பனைக்கும் ஜிஎஸ்டி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதனால் பட்டாசு உற்பத்தி குடோன்களுக்கே சென்று, மொத்த விலையில் கொள்முதல் செய்யும் விற்பனையாளர்கள் ஜிஎஸ்டி எண் மூலம் பட்டாசுகளைகளை வாங்கி, அதனை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர்.

ஆனால், தனி நபர்களாக அல்லது ஒரு குழுவாக வாங்கிச் சென்று அவற்றை தங்களுக்குள் பிரித்துக் கொள்ளும் வாடிக்கையாளர்கள் சிலர், மொத்த விலையில் பட்டாசுகளை வாங்க குடோன்களுக்கே நேரடியாகச் சென்று வாங்கி வருகின்றனர். அவர்களுக்கு இந்த முறை சில நெருக்கடிகள் ஏற்படும். காரணம், தனி நபர்களான அவர்களிடம் பெரும்பாலும் ஜிஎஸ்டி எண் இருக்காது. ஆனால் அதற்கு பதிலாக ஆதார் எண், பான் எண் உள்ளிட்ட அடையாளங்களைப் பெற பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதனால், தங்களுக்கு பட்டாசு விற்பனைகளின் மூலம் ஏற்படும் வரிச் சிக்கல்களை தவிர்க்க முடியும் என்கின்றன.