மதுரை மாட்டுத்தாவணி நக்கீரர் தோரண வாயில் இடிப்புப் பணியின்போது விபத்து ஏற்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இடிப்புப் பணி நடைபெற்றபோது, தூண் இடிந்து விழுந்ததில் பொக்லைன் ஆப்ரேட்டர் உயிரிழந்தார்.

நக்கீரர் தோரண வாயில் இடிப்பு

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் பேருந்து நிலையம் மற்றும் ஆம்னி பேருந்து நிலையம் பல்வேறு வணிக நிறுவனங்கள் உள்ளன. மாட்டுத்தாவணி சாலை விரிவாக்க பணிகளும் நடைபெற்று வருகிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள நக்கீரர் தோரண வாயில் உள்ள சாலை வழியாக பல்லாயிரக்கணக்கான வாகனங்களும் ஆயிரக்கணக்கான பேருந்துகளும் கடந்து செல்லும் நிலையில் தோரணவாயில் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாகவும் அதனை அகற்ற வேண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதனை அகற்ற நீதிமன்றமும் உத்தரவிட்டது. 


பொக்லைன் இயந்திரம் மூலம் இடிப்பு

இதனையடுத்து ஐந்தாம் உலக தமிழ் மாநாட்டை முன்னிட்டு 1981 ஆம் ஆண்டு மதுரை மாநகருடைய கிழக்கு நுழைவாயில் பகுதியான மாட்டுத்தாவணி பகுதியில் நக்கீரர் தோரண வாயில் கட்டிடம் கட்டப்பட்டது. நீதிமன்ற உத்தரவையடுத்து தோரணவாயில் கட்டிடத்தை இடிக்கும் பணியானது நேற்று இரவு தொடங்கியது. அப்போது ஆங்காங்கே சாலைகளில் போக்குவரத்து செல்லவும், பொதுமக்ககள் நடமாடவும் தடை விதிக்கப்பட்டு தடுப்புகள் வைத்து போக்குவரத்து காவல்துறை மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். இரண்டு பொக்லைன் இயந்திரம் மூலமாக இடிக்கும் பணி நடைபெற்றது அப்போது தோரண வாயில் ஒருபுறம் உள்ள தூணை கொஞ்சம் கொஞ்சமாக அடிப்பகுதி இடிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் தோரண வாயில் தூண் முழுவதுமாக சரிந்து பொக்லைன் இயந்திரத்தில் விழுந்தது. 

இதில் பொக்லைன் ஆப்ரேட்டரான மதுரை மாவட்டம் உலகாணி அருகேயுள்ள பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த நாகலிங்கம் என்ற இளைஞர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இயந்திரத்தின் அருகே நின்று கொண்டிருந்த ஒப்பந்ததாரரான மதுரை சம்பக்குளத்தைச் சேர்ந்த நல்லதம்பிக்கு காயம் ஏற்பட்டது. இந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூண் சரிந்து ஆப்ரேட்டர் பலி

பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தக்கூடிய பிரதான சாலையில் உள்ள பிரம்மாண்டமான தோரண வாயில் கட்டிடத்தை இடிக்கும் பணியின் போது உரிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டதால் இதுபோன்று விபத்து ஏற்பட்டு ஒரு இளைஞர் பரிதாபமாக உயிரிழக்கும் சம்பவம் நடந்து விட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இந்த விபத்து குறித்து புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.