A woman employee arrested for Rs 50 thousand bribe Suspended by corporation
கோயம்புத்தூர்
ரூ.50 ஆயிரம் இலஞ்சம் வாங்கி கைதான மாநகராட்சி பெண் ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கோயம்புத்தூர் மாவட்டம், கணபதி, உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (35). இவர் அதே பகுதியில் 3000 சதுர அடி பரப்பளவில் தொழில் கூடம் கட்டியிருந்தார்.
இந்த கட்டிடத்தில் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழில் மையம் நடத்த ஏற்பாடுகள் செய்து வருகிறார். இந்தக் கட்டிடத்திற்கு வரி விதிப்பு பெற மாநகராட்சியின் வடக்கு மண்டல அலுவலகத்தை கடந்த சில நாட்களுக்கு முன் அணுகினார்.
அப்போது, மண்டல அலுவலகத்தில் உதவி வருவாய் அதிகாரியாக உள்ள காளம்மாள், பில் கலெக்டர் பெண் ஊழியரான மாலா (50) ஆகியோர் 60 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் கேட்டுள்ளனர். அதற்கு சிவகுமார் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என கூறி உள்ளார்.
அப்போது காளம்மாளும், மாலாவும் ரூ.50 ஆயிரம் கொடுத்தால்தான் வரி விதிக்கப்படும். இல்லாவிட்டால் நிராகரித்து விடுவோம் என்று கூறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து சிவகுமாரும் இலஞ்சம் கொடுக்க ஒப்புக் கொண்டார்.
இதுகுறித்து கோயம்புத்தூர் இலஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இலஞ்ச ஒழிப்பு காவலாளர்கள் அறிவுறுத்தலின் படி மாலாவிடம், சிவகுமார் ரூ.50 ஆயிரம் இலஞ்சம் கொடுத்தார்.
அப்போது, மறைந்திருந்த இலஞ்ச ஒழிப்பு காவலாளர்கள் மாலாவை கையும் களவுமாக கைது செய்தனர். உதவி வருவாய் அதிகாரி காளம்மாள் பணிக்கு வரவில்லை. எனவே, அவர் காவலர் பிடியில் இருந்து தப்பினார்.
இலஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட மாலா இலஞ்ச வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான்மினோ முன் சமர்ப்பிக்கப்பட்டு கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
உதவி வருவாய் அதிகாரி காளம்மாள் மீதும் இலஞ்ச ஒழிப்பு காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து இலஞ்ச ஒழிப்பு காவலாளார்கள், "காளம்மாள் மற்றும் மாலா இலஞ்சம் கேட்டு பேசிய ஒலிப்பதிவு சி.டி. ஆதாரம் உள்ளது.
இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வோம். தேவைப்பட்டால் குரல் பரிசோதனை மூலம் குற்றத்தை நிரூபிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தனர்.
இலஞ்சம் வாங்கி கைதான மாலா மீது, இலஞ்ச ஒழிப்பு காவல் அதிகாரிகள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இந்த அறிக்கையின்படி மாலாவை மாநகராட்சி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.
