”இறந்துபோன தாய்மாமன் மடியில் வைத்து காதணி விழா” நெகிழவைத்த தங்கை..வினோத சம்பவம் !!
ஒட்டன்சத்திரத்தில் இறந்து போன, தாய்மாமன் உருவச் சிலையின் மடியில் அமர்ந்து வினோதமாக காதணி விழா நடைபெற்றது. இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்திருக்கிறது.
விபத்தில் இறந்த தம்பி :
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வினோபா நகரைச் சேர்ந்த சௌந்தர பாண்டி - பசுங்கிளி தம்பதியினரின் மகன் பாண்டித்துரை. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஒன்றில் இறந்து போனார். இந்நிலையில், அவருடைய மூத்த சகோதரி பிரியதர்ஷினியின் மகள் தாரிகா ஸ்ரீ, மகன் மோனேஷ் குமரன் ஆகியோரது காதணி விழா ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது.
இந்நிலையில், பாண்டித்துரை இறந்து போனதால் அவருடைய மெழுகு உருவச் சிலையை வைத்து தாய்மாமன் செய்முறைகள் செய்யப்பட்டு அவரது சிலையின் மடியில் குழந்தைகளை அமரவைத்து காது குத்தப்பட்டது. இதற்கு முன்னதாக தாய்மாமன் மெழுகு சிலை குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் ஊர்வலமாக திருமண மண்டபத்திற்கு எடுத்து வரப்பட்டது.
மெழுகு சிலை :
அக்காள் குழந்தைகளுக்கு தன்னுடைய மடியில் வைத்து காதணி விழா நடைபெற வேண்டும் என்பது பாண்டித் துரையின் நீண்ட நாள் கனவு. இதைத் தொடர்ந்து பாண்டித் துரையின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் 5 லட்சம் ரூபாய் செலவில் பெங்களுருவில் சிலை செய்து குழந்தைகளுக்கு காதணிவிழா நடத்தி மகனின் ஆசையை நிறைவேற்றியதாக குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வு ஆனது, அவர்களின் நண்பர்களிடையேயும், உறவினர்களிடையேயும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வினோத நிகழ்வு ஒட்டன்சத்திரம் பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.