பழனியில் குவிந்த பக்தர்கள்... திணறிய போலீசார்.. கொரோனா பரவும் அபாயம்..?
பழனி முருகன் கோவிலில் இன்று முதல் வரும் 18ஆம் தேதி வரை கோயிலில் அனுமதி இல்லை என்பதால் பக்தர்கள் தொடர்ந்து குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.
தமிழகத்தில் நம்பர் ஒன் வருமானம் உள்ள கோயிலாக இருக்கிறது பழனி மலை முருகன் கோவில். அதேபோல பிரசித்தி பெற்ற விழாவாகவும் ‘தைப்பூசம்’ உள்ளது. இந்த விழாவில் 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வழக்கமாக திரள்வார்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக இந்த விழா சிறப்பாக நடக்கவில்லை.
இந்நிலையில், அரசு ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கும், இரவு நேரம் ஊரடங்கு அமல் படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து பாதயாத்திரையாக பழனி கோயில் நோக்கி வந்தவண்ணம் உள்ளனர். சிலர் காவடி எடுத்தும், பாட்டுப்பாடி, ஆட்டம் ஆடியும் வருகின்றனர்.
இந்நிலையில், பழனி முருகன் கோவிலில் வருகிற 12-ந்தேதி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக வார இறுதி நாட்களில் தரிசன தடை உள்பட நாளை முதல் வரும் 18ஆம் தேதி வரை கோயிலில் பக்தர்கள் அனுமதி இல்லை என அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் பக்தர்கள் பழனியில் தொடர்ந்து குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.
பழனி அடிவாரம் , நான்கு ரத வீதி , கிரிவல வீதி உட்பட பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பக்தர்கள் ரோட்டை அடைத்து கொண்டு நடந்து செல்வதால் போலீசாரும் செய்வதறியாது தவித்து வருகின்றனர். கட்டுக்கடங்காத கூட்டம் பழனியில் படையெடுத்துள்ளது. இதையடுத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இருப்பினும் கூட்டம் கட்டுங்கடங்காததால், கொரோனா பரவும் அபாயம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது என்கிறார்கள் பொதுமக்கள்.