தமிழக அரசியல் சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தமிழக ஆளுநர் வித்யா சாகர் ராவ்,அறிக்கை அனுப்பியுள்ளார் என்றும் அதில் தற்போதைக்கு சசிகலாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பதற்கான சூழல் ஏதும் இல்லை என ஆளுநர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.

ஆனால் இந்த தகவலை ஆளுநர் மாளிகை செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளார். ஓபிஎஸ் சசிகலா இடையேயான அதிகாரப் போட்டியில் அதிமுக எம்எல்ஏக்கள் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

மேலும் தமிழகத்தில் உள்ள அசாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஆளுநர் விரைவில் முடிவு எடுக்க வேண்டும் எனவும் பல்வேறு அரசியல் கட்சிகள் கருத்துத் தெரிவித்துள்ளன.

இதனிடையே தமிழக சூழ்நிலை குறித்து மத்திய அரசுக்கும், உள்துறை அமைச்சகத்துக்கும் ஆளுநர் அறிக்கை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் அப்படி எந்தஒரு அறிக்கையையும் மத்திய அரசுக்கு அனுப்பவில்லை என ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.