தஞ்சாவூர்

தஞ்சாவூரில் தோழியிடம் பேசிக் கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து காரில் வந்த கொள்ளையர்கள் ஆறு சவரன் சங்கிலியை பறித்தனர். தீவிர விசாரணைக்கு பிறகு நெல்லையை சேர்ந்த திருடனை காவலாளர்கள் கைது செய்தனர். 

தஞ்சாவூர் மாவட்டம், மருத்துவக் கல்லூரி சாலை ஈஸ்வரி நகர் ஸ்டேட் வங்கி காலனி இரண்டாம் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருடைய மனைவி ஆனந்தி (54).  

இவர் கடந்த 13-ஆம் தேதி வீட்டில் இருந்த குப்பைகளை ஸ்ரீராம்நகரில் உள்ள தொட்டியில் கொட்டுவதற்காக சென்றார். குப்பைகளை தொட்டியில் கொட்டிவிட்டு வரும்போது அதே பகுதியைச் சேர்ந்த இலட்சுமியும் குப்பைகளை கொட்டுவதற்காக வந்தார்.

இலட்சுமியை பார்த்தவுடன் அவரை அழைத்து ஆனந்தி பேசி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இரண்டு பேர் காரில் வந்தனர். அவர்களில் ஒருவன் காரைவிட்டு கீழே இறங்கி வந்து ஆனந்தியின் கழுத்தில் கிடந்த ஆறு சவரன் சங்கிலியை பறித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அலறினார். 

அவரின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் காரில் ஏறி அந்த நபர், தனது நண்பருடன் தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்து தஞ்சை மருத்துவக் கல்லூரி காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

காரில் வந்த திருடர்களை பிடிக்க காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி துணை காவல் கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் உதவி ஆய்வாளர் சுகுமார், காவலாளர்கள் ராஜேஷ்கண்ணன், மோகன், மார்ட்டின், சிவபாதசேகர் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. 

தஞ்சை மருத்துவகல்லூரி சாலை, ரெட்டிப்பாளையம் சாலை ஆகியவற்றில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தனிப்படை காவலாளர்கள் பார்த்தனர்.

அதில் திருநெல்வேலி பதிவு எண் கொண்ட ஒரு காரில் வந்தவர்கள் மீது காவலாளர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த கார் எண்ணை கொண்டு கார் உரிமையாளரின் முகவரியை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மூலம் காவலாளர்கள் பெற்றனர். 

அந்த கார் பத்து பேரிடம் கைமாறி இருந்தது. இறுதியாக நெல்லை மாவட்டம் மானூரை சேர்ந்த செல்லப்பா மகன் உமேஷ் (27) வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து உதவி ஆய்வாளர் சுகுமார் மற்றும் தனிப்படை காவலாளர்கள், நெல்லை மாவட்டம் மானூருக்கு விரைந்து சென்றனர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த கார், மானூரில் நின்றதை காவலாளர்கள் பார்த்தனர். இந்த காரில் வந்துதான் சங்கிலி பறிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்த காவலாளர்கள், கார் நின்ற வீட்டிற்குள் அதிரடியாக புகுந்து உமேசை சுற்றி வளைத்து பிடித்தனர். 

அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் தான் தனது நண்பர்களுடன் இணைந்து சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து உமேசை காருடன் தஞ்சைக்கு அழைத்து வந்து மருத்துவகல்லூரி காவலாளர்களிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் உமேசிடம் ஆய்வாளர் பெரியசாமி மற்றும் காவலாளர்கள் விசாரணை நடத்தியதில், இவர் மீது இரண்டு கொலை வழக்குகள் இருப்பதும், சக நண்பர்களான திருநெல்வேலியை சேர்ந்த மாணிக்கராஜ், ராமையா, இசக்கிமுத்து ஆகியோருடன் சேர்ந்து சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. 

உமேசை காவலாளர்கள் கைது செய்து அவரிடம் இருந்து ஆறு பவுன் சங்கிலியையும், காரையும் பறிமுதல் செய்தனர். தலைமறைவாகி உள்ள மூவரையும் காவலாளர்கள் தேடி வருகின்றனர். இவர்கள் மீதும் வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.