சென்னையில் மேலும் ஒரு போலீசார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெயலலிதா நினைவிடத்தில் பணியில் இருந்த போலீசார் 

துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில், சென்னையை அடுத்த அயனாவரத்தில் காவல் ஆய்வாளர் சதீஷ்குமார் (33) நேற்றிரவு பணியில் இருந்தபோது தனது கைத் துப்பாட்ககியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.சதீஷ்குமார் தற்கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது.

பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளரிடம், சதீஷ்குமார், சொந்த வேலைக்காக வெளியே செல்ல வேண்டும் என்று கூறி, துப்பாக்கி பாதுகாப்பு பெட்டியின் சாவியை வாங்கி சர்வீஸ் கைத்துப்பாக்கியை எடுத்துச் சென்றுள்ளார். 

பின்பு வெள்ளை காகிதத்தில் எதையோ எழுதி மேசையில் வைத்துவிட்டு வெளியே சென்றவர் மீண்டும் உள்ளே வந்து துப்பாக்கியை தனது நெற்றிக்கு நேராக வைத்துள்ளார். 

இதனைப் பார்த்த உதவி ஆய்வாளர் சிரஞ்சீவி, சார் விளையாடாதீங்க என்று கூறியுள்ளார். மீண்டும் துப்பாக்கியை சிரஞ்சீவியை நோக்கி காண்பித்ததுடன், காவல் நிலையத்தை விட்டு வெளியே ஓடிச் சென்று தன்னைத்தானே சுடுக் கீழே விழுந்துள்ளார்.

அவர் எழுதி வைத்திருந்த காகிதத்தில், தனது சாவுக்கு யாரும் காரணமில்லை என்றும், சில செல்போன் எண்களையும், அவரது சகோதரரின் செல்போன் எண்ணையும் குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவம் காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. 

இரு தினங்களுக்கு முன்பு  ஜெயலலிதா நினைவிடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், 

மீண்டும் அதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.