தமிழக பாஜகவில் புதிதாக ஸ்டார்ட் - அப் பிரிவு தொடக்கம்!
தமிழக பாஜகவில் புதிதாக ஸ்டார்ட் - அப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது
தமிழக பாஜகவில் புதிதாக ஸ்டார்ட் - அப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. அப்பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளராக ஆனந்தன் அய்யாசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்தும் வகையில், தமிழக பாஜக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, நிர்வாகம் மற்றும் சமூக மேம்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட நமது அணிப் பிரிவுகளை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தியுள்ளது. விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு, மத்திய அரசின் நலத் திட்டங்கள் பிரிவு, தரவு மேலாண்மைப் பிரிவு மற்றும் ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகள், கட்சியின் செயல்பாடு மற்றும் மக்கள் தொடர்பை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளன. தரவு மேலாண்மைப் பிரிவானது, தரவு சார்ந்த உத்திகளை முன்னிறுத்தி, ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட முடிவுகள் எடுக்க உதவுகிறது. மேலும், கட்சி பொதுமக்களுடன் தனிப்பட்ட முறையில் நேரடியாகத் தொடர்பு கொள்ள உதவுகிறது.
தமிழகத்தின் ஆன்மீகம் மற்றும் வளமான கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் பாதுகாத்து மேம்படுத்துவதில் கட்சியின் அர்ப்பணிப்பை ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவு வெளிப்படுத்துகிறது. விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு, தமிழக பாஜக, அடிமட்ட அளவில் திறமையானவர்களைக் கண்டறிந்து அவர்கள் திறமைகளை மேம்படுத்த உதவுகிறது. சமூகநீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான எங்கள் கட்சியின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, மத்திய அரசின் நலத்திட்டங்களின் பலன்கள், தகுதியான பயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்வதில் மத்திய அரசு நலத்திட்டப் பிரிவு முக்கிய பங்கு வகிக்கிறது.
மேற்கூறப்பட்ட பிரிவுகளும், கட்சியின் திறமையான அணிகளும், பிற பிரிவுகளும், தமிழக மக்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு பெருமளவில் உதவி வருகின்றன. இதன் மூலம், தமிழக பாஜக, மக்களைப் பெருமளவில் சென்றடையவும், மக்கள் மத்தியில் கட்சியின் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளவும் உதவியுள்ளன.
தனது தீவிர செயல்பாடுகளாலும், பொதுமக்களை ஈர்க்கும் அணுகுமுறையை வெளிப்படுத்துவதன் மூலமாகவும், தமிழக பாஜக, தமிழகத்தில் ஒரு திறம் மிக்க அரசியல் சக்தியாக தன்னை வலுப்படுத்தியுள்ளது.
இன்றைய தினம், புதுமையான முயற்சிகளை உற்சாகப்படுத்தவும், ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கு ஒரு முக்கிய தகவல் தொடர்புப் பாலமாகச் செயல்படுவதற்கும், ஸ்டார்ட்-அப் பிரிவு என்ற புதிய பிரிவைத் தமிழக பாஜக தொடங்கவிருக்கிறது.
சூர்யா சிவாவுக்கு மீண்டும் பாஜகவில் பொறுப்பு: அண்ணாமலை அறிவிப்பு!
இந்தப் பிரிவைத் தொடங்கியதின் நோக்கம், வளர்ச்சியை உருவாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகும். இந்த முன்னெடுப்பானது, தமிழக இளைஞர்களிடையே பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், திறமையான மற்றும் புதுமையான சிந்தனையாளர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், மேலும் நமது தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் வளத்துக்கு முக்கியப் பங்களிப்பதற்கும், தமிழக பாஜக கொண்டிருக்கும் குறிக்கோளை வெளிக்காட்டுகிறது.
இந்த ஸ்டார்ட் - அப் பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளராக, இன்டெல் நிறுவனத்தின் முன்னாள் பொறியியல் இயக்குநராகப் பணியாற்றியவரும், தற்போது தமிழக பாஜகவின் தென்காசி மாவட்டத்தில் தீவிர களப்பணியாற்றி வருபவருமான ஆனந்தன் அய்யாசாமி நியமிக்கப்பட்டுள்ளார் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புதிய பொறுப்பில் அவர் திறம்படச் செயல்பட, எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.