உடல் நிலை சரியில்லை என்று வந்த பெண்களை மாந்திரீகம் செய்து தீர்த்து வைக்கிறேன் என்று சொல்லி பூஜை செய்வதாக தனியே அழைத்துச் சென்று நிர்வாணப்படுத்தி மானபங்கம் செய்துள்ள சம்பவம் செய்யூர் அருகே நடந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வட்டம் ஓதியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் அப்பகுதியில் ஜோதிடம் பார்த்து வந்துள்ளார். மாந்ரீகமும் செய்து வந்துள்ளார். இவரிடம் ஜோதிடம் பார்க்க வரும் பெண்களிடம் முறை தவறி நடந்து வருவதாக பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தது. 

இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த தெய்வானை (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) ஸ்ரீதரிடம் ஜோதிடம் பார்க்க வந்துள்ளார். அப்போது தெய்வானை, உடல்நிலை தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை தீர்த்து வைக்கவும் ஜோதிடரிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்ட ஜோதிடர் ஸ்ரீதரும், மாந்ரீகத்தின் மூலம் இதனை சரி செய்யலாம் என்று கூறி, குறிப்பட்ட நாளில் வர சொல்லியுள்ளார்.

ஜோதிடரின் வார்த்தையை நம்பிய தெய்வானையும் குறிப்பிட்ட நாள் அன்று ஸ்ரீதரை சந்தித்துள்ளார். அப்போது அவர், மாந்ரீகம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்காக நிர்வாணமாக இருக்க வேண்டும் என்று கூறி தெய்வானையை பலாத்காரம் செய்துள்ளார். ஸ்ரீதரின் இந்த செயலால் அதிர்ந்துபோன தெய்வானை, இது குறித்து தன் குடும்பத்தாரிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து அவர்கள், செய்யூர் போலீஸ் நிலையத்தில் சென்று புகார் அளித்தனர். 

ஜோதிடர் ஸ்ரீதர் மீது தெய்வானை தரப்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், ஸ்ரீதரால் பாதிக்கப்பட்ட சுமதி என்ற பெண்ணின் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவர்களது புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். காவல் நிலையத்தில் தெய்வானை புகார் அளித்த நிலையில், சுமதி என்ற பெண்ணும், செய்யூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.