சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்குச் செல்லும் ரயில்கள் வெடி வைத்து தகர்க்கப்படும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

திருத்தணி ரயில்நிலைய மேலாளருக்கு இன்று அனுப்புநர் முகவரி இல்லாத கடிதம் ஒன்று வந்தது. அதில் நீலகிரி, தூத்துக்குடி, நெல்லை,உள்ளிட்ட ரயில்கள் மாவோயிஸ்டுகளால் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  நீலகிரி மங்களூர் ரயில்கள் அரக்கோணம் அருகேவும், நெல்லை தூத்துக்குடி ரயில்கள் மேல்மருவத்தூர் அருகேயும் வெடி வைத்து தகர்க்கப்போவதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து சென்னை மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் உடமைகள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே உடன் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

இதற்கிடையே ரயிலில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மிரட்டல் விடுத்த கங்காதரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் இவர் ரயில்வே முன்னாள் ஊழியர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு இதே போன்று மிரட்டல் கடிதம் விடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.