கொரோனாவுக்கு பின்பு, 2022-ல் தமிழ்நாட்டில் மிக அதிக அளவு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. 2022-ல் மட்டும் தமிழகத்தில் 1 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

2023-24—ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை அப்போதைய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகரான் தாக்கல் செய்தார். தனது பட்ஜெட் உரையில், தமிழ்நாடு 2 ஆண்டுகளில் அதிகளவிலான முதலீடுகளை ஈர்த்து வருகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்களில் 46% வாகனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

அந்தவகையில் கொரோனாவுக்கு பின்பு, 2022-ல் தமிழ்நாட்டில் மிக அதிக அளவு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. 2022-ல் மட்டும் தமிழகத்தில் 1 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் கொரோனாவுக்கு பிறகு பொருளாதார ரிதியில் கடும் பின்னடைவை சந்தித்த போதும் தமிழ்நாட்டில் மட்டும் அதிக முதலீடுகள் குவிந்துள்ளன.

இந்தியாவில் மின்சார வாகனங்களில் உற்பத்தியில் தமிழ்நாடு தான் முன்னிலை வகித்து வருகிறது. ஆட்டோமொபைல் சாதனங்கள் உற்பத்தியில் சென்னை தான் இந்தியாவிலேயே முன்னணியில் உள்ளது. சென்னை முழுவதும் கார், பைக் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தான் உலகிலேயே மிகப்பெரிய பைக் உற்பத்தி ஆலையை ஓலா நிறுவனம் கிருஷ்ணகிரியில் அமைத்தது. 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த இருசக்கர உற்பத்தி மையம் உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி மையமாக உள்ளது. ஓலாவை தொடர்ந்து பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன.

இதனிடையே தமிழ்நாட்டில் ரூ.5,300 கோடி முதலீடு செய்ய நிசான் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. நிசான் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை விரிவாக்கத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள ஆலையில் எஞ்சின் கார் மட்டும் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிய எலக்ட்ரிக் கார் உருவாக்க ஆலை அமைக்கப்பட உள்ளது. சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த சூழலில் ஆப்ப்பிள் நிறுவனமான பாக்ஸ்கான் நிறுவனம், மின்சார வாகனங்களை உருவாக்க முடிவு செய்துள்ளது. இதற்காக இந்தியாவில் அந்த நிறுவனம் தொழிற்சாலையை தொடங்க உள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் ஏற்கனவே தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் பாக்ஸ்கான் தொழிற்சாலையை தமிழகத்தில் தொடங்குவதற்கான ஒப்பந்தத்தை பெற தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதற்கான பணிகளை தொழில்துறை மேற்கொண்டு வருதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இதற்கான கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.