லண்டனில் இருந்து சென்னை வந்த விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், விமானம் மீண்டும் லண்டனில் தரையிறக்கப்பட்டது.

லண்டன் டூ சென்னை வந்த விமானத்தில் கோளாறு : அகமதாபாத்தில் இருந்து லண்டன் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நொடிகளில் மேகானி நகர் பகுதியில் உள்ள B.J. மருத்துவக் கல்லூரி விடுதி வளாகத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேரும் 4 மருத்துவ மாணவர்கள் மற்றும் 4 மருத்துவர்களின் உறவினர்கள் அடங்குவர். மொத்த உயிரிழப்பு 270-274 ஆக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விமானம் புறப்பட்டவுடன் உயரம் எடுக்க முடியாமல், இயந்திரங்களில் உந்துதல் இல்லாமல் இருந்ததாக ஆரம்ப அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனிடயே விமான பயணிகளை அச்சம் அடைய செய்யும் வகையில் லண்டனில் இருந்து சென்னை வந்த விமானம் நடு வானில் இயந்திர கோளாறு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் இருந்து சென்னை நோக்கிப் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் புறப்பட்ட சுமார் ஒரு மணி நேரத்தில் இறக்கைகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திற்குத் மீண்டும் திரும்பியது. இதனையடுத்து பத்திரமாக விமானம் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. இந்த விமானம் 360 பயணிகளுடன் புறப்பட்டு, நடுவானில் பறந்தபோது இயந்திரக் கோளாறு கண்டறியப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமானிகள் லண்டன் விமான நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து உடனடியாக மீண்டும் விமான நிலையம் திரும்ப அறிவுறுத்தப்பட்டது.

சென்னை வந்த விமானத்தில் நடு வானில் கோளாறு

இதன் காரணமாக விமானத்தில் உள்ள எரிபொருள் எடையைக் குறைக்க ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வானில் வட்டமிட்ட பின்னர், விமானம் பத்திரமாக ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இது தொடர்பாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் கூறுகையில், இது அவசர தரையிறக்கமாகக் கருதப்படவில்லை, மாறாக தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முன்னெச்சரிக்கையாக ஹீத்ரோ விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. அனைத்து பயணிகளும் பத்திரமாக இறக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இதனையடுத்து பயணிகளின் பயணத்தை மீண்டும் தொடர வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.விமானம் சென்னைக்கு வருவதற்கு முன்பே லண்டனில் தரையிறங்கியதால், சென்னை விமான நிலையத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும், இந்த சம்பவம் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை டூ லண்டன்- லண்டன் டூ சென்னை இடையேயான விமான சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சுமார் 700 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.