A flash pack of Chennai fire... Today Chennai Silks 45 years ago LIC

சென்னையில் தி சென்னை சில்க்ஸில் பிடித்த தீ தேசமெங்கும் பரபரப்பு புகையை கிளப்பியிருக்கிறது! எல்லா கேமெராக்களும் தி நகரையே ஃபோகஸ் செய்து கொண்டிருக்கின்றன. சமீப காலத்தில் தமிழகத்தை உலுக்கிய மெகா தீ விபத்துக்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. இருந்தாலும் சென்னையை உலுக்கிய எல்.ஐ.சி. தீ விபத்துக்குப் பிறகு சென்னை சில்க்ஸ் தீ விபத்து நடுங்க வைக்கிறது என்கிறார்கள் சென்னை மண்ணின் பரம்பரை மக்கள். 

எல்.ஐ.சி.யை சென்னையின் அடையாளமாக, ஆச்சரிய கட்டடமாக பார்த்தே பழகிய மக்களுக்கு அங்கு நடந்த கொடூர தீ விபத்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது நிகழ்ந்தது 1975ல்.

எல்.ஐ.சி. எனும் மெகா கட்ட்டம் கட்டப்பட்டது 1957_ல். அந்த காலத்திலேயே ஒரு கோடி ரூபாய் செலவில் பதினான்கு மாடிகளுடன் அண்ணாசாலையில் கன கம்பீரமாக எழுப்பப்பட்டது இந்த கட்டடிடம். 177 அடிகள் உயரத்தில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை அப்போதைய மத்திய நிதி மந்திரி மொரார்ஜி தேசாய் திறந்து வைத்தார். இந்த கட்டிடம்தான் தமிழ்நாட்டிலேயே மிக உயரமான கட்டிடமாக பல வருடங்களாக கொண்டாடப்பட்டது. 

14வது மாடியின் உச்சியில் நின்றால் வட்ட வடிவில் சென்னையின் முழு வியூவை பார்க்கலாம். 25 காசு கட்டணம் வசூலித்து பொதுமக்கள் இதை பார்க்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால் ஒரு வாலிபர் இங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள, அந்த அனுமதி நிறுத்தப்பட்டது. 

அந்த கால சினிமாக்களும், கதைகளும், நாவல்களும், சென்னையின் தோற்றத்தை விளக்க எல்.ஐ.சி. பில்டிங்கைதான் இந்த எல்.ஐ.சி. கட்டிடத்தைத்தான் எடுத்துக் கொள்வார்கள். இப்படி ஆச்சரிய கட்டமைப்பாக கருதப்பட்ட இங்கு 1975 ஜுலை 11ம் தேதி இரவு 8:30 மணியளவில் தீ பற்றியது. பதினான்கு மாடிகளும் பற்றிக் கொண்டு எரிந்தன. தீ ஜூவாலைகள் வானத்தை முட்டிட துடித்தன. புகை மூட்டத்தினால் அந்த பகுதியே இருண்டது. அக்கம்பக்க கடைகள் மூடப்பட்டு அவர்கள் ஓட்டம் பிடித்தனர்.

இன்று போல் தொலை தொடர்பு, நவீன தீயணைப்பு என்று எந்த வசதியுமில்லை. ஆனாலும் சுமார் 1500 பேர் தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். உயரமான ஏணிகளை பயன்படுத்திய போதும் 5வது மாடிக்கு மேல் தண்ணீரை பீய்ச்சியடிக்க முடியவில்லை. இருந்தாலும் போராடினர். வாய் மொழியாகவே சென்னை முழுக்க பரவிய இந்த செய்தியை கேட்டு மக்கள் பல பகுதிகளில் இருந்தும் ஓடோடி வந்தனர். ஆனால் போலீஸ் அவர்களை முன்னாடியே தடுத்தது. அண்ணாசாலை, திருவல்லிக்கேணி, புதுப்பேட்டை, எழும்பூர் போன்ற இடங்களில் உள்ள வீடுகளில் நின்று பார்த்தாலும் கூட தீ எரிவது தெரிந்தது. 

எல்.ஐ.சி. கட்டிடத்தின் தரை தளத்தில் உம்மிடியார் நகைக்கடை, பின்னி ஜவுளிக்கடை, பெருமாள் செட்டி ஸ்டேஷனரி என்று பல கடைகள் இருந்தன. இவற்றிலிருந்த தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் உள்ளிட்ட அத்தனையும் பற்றி எரிந்து கருகின. 

எல்.ஐ.சி. அலுவலகத்திலிருந்த மரசாமான்கள், பீரோக்கள் கருகி சாம்பலாகின. தஸ்தாவேஜுகள் தீ பற்றியதோடு காற்றில் தீப்பந்தங்களாக பறந்து வெகுதூரத்தில் போய் விழுந்தன. முதல்வர் கருணாநிதி இந்த தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் சிந்தாதிரிப்பேட்டையில் நெடுஞ்செழியன் பிறந்தநாள் விழா கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார். தீ விபத்து பற்றி கேள்விப்பட்டதும் அங்கே விரைந்தார். தீயணைப்பு பணிகள் குறித்து கேட்டுக்கொண்டு அதை துரிதப்படுத்தவும் உத்தரவிட்டார். 

இரவில் துவங்கி நள்ளிரவு, அதிகாலை என கடந்து மறுநாள் காலை வரை எரிந்து கொண்டே இருந்தது. தீயால் ஏற்பட்ட வெடிப்புகளால் கட்டிடம் விழுந்துவிடுமோ என்று அச்சப்படனர் தீயணைப்பு வீரர்கள். ஆனால் நிபுணர்கள் வந்து ஆராய்ந்து ‘கட்டிடம் உடைய வாய்ப்பில்லை.’ என்று சொன்ன பிறகு துணிந்து உள்ளே சென்று ஒவ்வொரு மாடியாக அணைத்தனர். மாலை 6 மணியளவில்தான் 14வது மாடியை அடைந்தனர். கிட்டத்தட்ட இருபத்து இரண்டு மணி நேரம் எரிந்து அடங்கியது அக்னி. 

இந்த கொடூர தீ விபத்தில் எல்.ஐ.சி. பில்டிங்கில் இருந்த பல்லாயிரக்கணக்கான தஸ்தாவேஜூகள் கருகின. ஆனால் ஏழு லட்சம் பேரின் பாலிசிகள் பாதாள அறையில் இருந்ததால் அவை தப்பின. 

இப்படி 1975_ல் சென்னையை உலுக்கிய தீ விபத்துக்குப் பிறகு இப்போது இப்படி ஒரு விபத்து என்கிறார்கள். 
இன்று எரிந்து கொண்டிருக்கும் சென்னையின் தி சென்னை சில்க்ஸ் உரிமையாளர்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மற்றும் அவரது தோழி சசிகலாவுடனும் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்தவர்கள் என்கிறார்கள். இரு தரப்பும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவியிருப்பதாக தி நகர் ஏரியா மரத்தில் வாழும் ஒரு பட்சி சொல்கிறது.

அதே பட்சி ‘இந்த விபத்து நேர்ந்தது எப்படி? ஏதேனும் மர்மம் இருக்கிறதா? சதி செயலா?” என்று பல கேள்விகளை எழுப்புகிறது. கூடவே ‘மின் கசிவால் நேர்ந்த தீ விபத்து.’ என்று வழக்கம்போல் ஃபைலை மூடி விடவும் வாய்ப்பிருக்கிறது என்றும் எச்சரிக்கிறது. 
 "ஆக மொத்தத்தில் இந்த புகை விஷயத்துக்கு பின்னே ஏதோ புகைகிறது"!