அதிமுக தோல்விக்கு சில துரோகிகள் தான் காரணம் என்றும் துரோகிகளை அடையாளம் காட்ட வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அதிமுக தோல்விக்கு சில துரோகிகள் தான் காரணம் என்றும் துரோகிகளை அடையாளம் காட்ட வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் சங்கம் நடத்திய பாராட்டு விழாவில் கலந்துகொள்ளாமல் தவிர்த்தார். அவர் கலந்துகொள்ளாதது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழாவில் முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் படங்கள் இல்லை என்றும் தன்னை வளர்த்து விட்டு ஆளாக்கிய தலைவர்களின் படம் இல்லாத காரணத்தால் விழாவுக்குச் செல்லவில்லை என்று விளக்கம் அளித்த செங்கோட்டையில் விழாவைத் தான் புறக்கணிக்கவில்லை என்றும் கூறினார்.

இதைத் தொடர்ந்து புதன்கிழமை செங்கோட்டையன் தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், ஈரோடு அத்தானியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏ. செங்கோட்டையன் கலந்துகொண்டு பேசியுள்ளார்.

"தலைவரோடு பயணித்தோம். பிறகு தலைவர் காட்டிய வழியிலேயே பயணித்தோம். இயக்கத்திற்காக எந்த தியாகத்தையும் செய்யக்கூடிய தொண்டர்கள் வேறு எந்த இயக்கத்திலும் இல்லை. அதிமுகவில் மட்டும்தான் இருக்கிறார்கள். இந்த முறை மட்டும்தான் தோல்வியைத் தழுவியுள்ளோம்.

அதிமுக தேர்தலில் தோல்வியைச் சந்தித்ததற்கு துரோகிகள்தான் காரணம். அவர்கள் யார் என அடையாளம் காட்ட வேண்டும். நான் தொண்டனோடு தொண்டனாக இருந்து பணியாற்றத் தயாராக இருக்கிறேன். 2026 இல் அதிமுகவை ஆட்சியில் அமர வைக்க அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டும்" என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையத்தைச் சேர்ந்தவர் செங்கோட்டையன். அதிமுகவில் மிக மூத்த தலைவரான இவர் எம்.ஜி.ஆர் கலாத்தில் இருந்தே அக்கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னிர்செல்வம் ஆகியோருக்கு முன்பே கட்சியில் சேர்ந்தவர்.

கடந்த அதிமுக ஆட்சியில் கல்வித்துறை அமைச்சராக இருந்தார். தற்போது கோபிசெட்டிபாளையம் எம்.எல்.ஏ.வாக உள்ளார். கட்சியில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராகவும் பொறுப்பு வகிக்கிறார்.