10 ரூபாய் நாணயம் செல்லாது என பொதுமக்கள் மத்தியில் நிலவி வரும் குழப்பங்களை தீர்க்கும் வகையில் சேலத்தில் மருத்துவர் ஒருவர் 6 லட்சம் ரூபாய்க்கு 10 ரூபாய் நாணயங்களாக கொடுத்து கார் வாங்கி அசத்தியுள்ளார். 

10 ரூபாய் நாணயம் செல்லாதா?

10 ரூபாய் நாணயங்கள் செல்லுமா?செல்லாதா? என மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பேருந்துகள், மளிகை கடைகள், காய்கறிகடைகள், வங்கிகள் என எங்கு சென்று 10 ரூபாய் நாணயத்தை கொடுத்தால் இது செல்லாதுப்பா வேற காசு கொடு என கேட்பார்கள், அவர்களிடம் எவ்வளவு சொல்லியும் புரிந்துகொள்ள மாட்டார்கள், ரிசர்வ் வங்கியும் 10 ரூபாய் நாயணம் செல்லும் என அறிக்கையும் வெளியிட்டது. ஆனால் யாரோ ஒருவர் கிளப்பிவிட்ட புரளியை மக்கள் இன்னும் நம்பிக்கொண்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட சேலத்தை சேரந்த ஆயூர்வேத மருத்துவரான வெற்றிவேல் 10 ரூபாய் நாணயங்களாக 6 லட்சம் ரூபாய்க்கு சேர்த்து புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த சம்பவம் தான் தற்போது நாடு முழுவதும் வைரலாக பரவி வருகிறது. தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்தவர் வெற்றிவேல். ஆயுர்வேத மருத்துவரான இவர், மழலையர் பள்ளியும் சிறு வியாபாரமும் செய்து வருகிறார். இதன் மூலம் கிடைத்த பணங்களை வங்கிக்கு கொண்டு சென்ற போது 10 ரூபாய் நாணயங்களை வங்கி ஊழியர்கள் வாங்க மறுத்துள்ளனர். மேலும் தன் பள்ளியில் பத்து ரூபாய் நாணயங்களை செல்லாக்காசு எனக்கூறி சிறுமிகளும் விளையாடிக்கொண்டிருந்துள்ளனர். 

10 ரூபாய் நாணயங்களை கொடுத்து கார் வாங்கிய மருத்துவர்

இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர் வெற்றிவேல், பத்து ரூபாய் நாணயம் செல்லாது என பரவலாக பேசப் பட்டு வருவதை பொய்யாக்கி அனைவரும் பயன்படுத்த வைக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் 10 ரூபாய் நாணயங்களை சிறிது சிறிதாக சேர்த்து சொகுசு கார் வாங்க வேண்டும் என்று திட்டமிட்டார். அதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கோவில்கள், வணிக வளாகங்கள், கடைகள், சாலையோர கடைகள் என பல பகுதிகளிலும் இந்த நாணயத்தை சேகரித்துள்ளார். இந்த 10 ரூபாய் நாணயங்களை மூட்டையாக கட்டிக்கொண்டு தனது உறவினர்கள் உதவியோடு சேலத்தில் உள்ள பிரபலமான கார் ஷோரூம் சென்று தனக்கு பிடித்தமான காரை வெற்றிவேல் வாங்கியுள்ளார். இதுகுறித்து வெற்றிவேல் கூறும் போது, '10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவிக்கவில்லை. ஆனால் சேலம், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட வட மாவட்டங்களில் 10 ரூபாய் நாணயங்களை கடைகளிலும், ஓட்டல்களிலும் வாங்க மறுக்கிறார்கள். இதனால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 10 ரூபாய் நாணயங்களை ரூ.6 லட்சத்துக்கு சேகரித்து கார் வாங்கி உள்ளேன்' என தெரிவித்தார்.