கோயம்புத்தூர்

சிறுமுகையில் விவசாயத் தோட்டத்திற்குள் காட்டுப் பன்றிகள் நுழைவதைத் தடுக்க சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோயம்புத்தூர் மாவட்டம், சிறுமுகையை அடுத்த இலுப்பநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பழனிசாமி (55). இவரது மனைவி ஜானகி.  இவர்களுக்கு சரண்யா (15), அரிபிரசாந்த் (13) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். அரிபிரசாந்த் அப்பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

பழனிசாமியின் தோட்டத்திற்கு அருகே வீரபத்ரன் என்பவருக்குச் சொந்தமான தோட்டம் ஒன்று உள்ளது. இவரது மனைவி மல்லிகா இலுப்பநத்தம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் ஆவார். 

வீரபத்ரன் தனது தோட்டத்திற்குள் அடிக்கடி காட்டுப் பன்றிகள் நுழைந்து சேதத்தை ஏற்படுத்துவதால் மின்வேலி அமைத்திருந்தார். இது சட்டத்திற்கு விரோதமானது.

இந்த நிலையில் வீட்டருகே அரிபிரசாந்த் நேற்று காலை விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அருகில் உள்ள வீரபத்ரனின் தோட்டப் பகுதிக்குச் சென்ற அரிபிரசாந்த் எதிர்பாராதவிதமாக அங்கிருந்த மின்வேலியில் சிக்கிக் கொண்டார். இதில், அரிபிரசாந்த சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

நெடுநேரமாகியும் மகன் வீடு திரும்பாததால் அப்பகுதியில் பழனிசாமி தேடிப் பார்த்தபோது அங்கு அரிபிரசாந்த் மின்வேலியில் சிக்கி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்து அலறி அழுதார் பழனிச்சாமி.

மின்வேலியில் சிக்கி சிறுவன் பலியான சம்பவம் பற்றி அறிந்த வீரபத்ரன்  தப்பித்து ஓடி தலைமறைவானார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த காவலாளர்களுடன் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், வீரபத்ரனை உடனடியாக கைது செய்யுமாறும் வலியுறுத்தினர்.

இதனையடுத்து அப்பகுதி மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய சிறுமுகை காவலாளர்கள் அரிபிரசாந்தின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சிறுமுகை காவலாளர்கள் வழக்குப் பதிந்து தலைமறைவாக உள்ள வீரபத்ரனை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.