தருமபுரி 

தருமபுரி மாவட்டம் முழுவதும் ரூ.20 கோடியே 47 இலட்சம் மதிப்பில் 80 புதிய தார் சாலைகள் ஆறு மாதத்திற்குள் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் ஆலாபுரம், இருளப்பட்டி, பி.பள்ளிப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 45 இலட்சம் மதிப்பில் 8.16 கிலோ மீட்டர் தொலைவு புதிய தார்சாலைகள் அமைக்கப்பட உள்ளது. 

இந்த பணிக்கான பூமிபூஜை விழா ஆட்சியர் மலர்விழி தலைமையில் நேற்று நடைப்பெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர், உதவி ஆட்சியர்கள் ராமமூர்த்தி, பத்மாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பங்கேற்று தார்சாலை அமைக்கும் பணியை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். 

அப்போது அவர் பேசியது: "தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 126.12 கிலோ மீட்டர் தொலைவுக்கு 80 தார்சாலைகள் அமைக்கப்பட உள்ளது. 

இந்தத் திட்டத்திற்கு ரூ.20 கோடியே 47 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த பணிகள் ஆறு மாத காலத்திற்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்" என்று அவர் கூறினார்.