8 way road between Salem - Chennai should not be set up More than 100 people protest

சேலம்

மக்களுக்கு எந்த பயனையும் ஏற்படுத்தாத சேலம் - சென்னை இடையே 8 வழி சாலையை அமைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் 100-க்கும் மேற்பட்ட மக்கள், மாடுகளுடன் வந்து சாலை மறியல் செய்தனர்.

சேலம் - சென்னை இடையே எட்டு வழி பசுமை விரைவு சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக சேலம் எருமாபாளையம், ஜருகுமலை, சன்னியாசிகுண்டு, நிலவாரப்பட்டி, பனமரத்துப்பட்டி, கஞ்சமலை, அரியானூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பசுமை சாலை அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலம் எருமாபாளையம் அடுத்த பனங்காடு கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று மாடுகளை அழைத்து வந்து சேலம் - உளுந்தூர்பேட்டை பைபாஸ் எருமாபாளையம் பிரிவு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 

இது குறித்து தகவல் அறிந்த கிச்சிபாளையம் காவல் ஆய்வாளர் நாகராஜன் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, அவர்களிடம் நிலம் கையகப்படுத்துவது சம்பந்தமாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக காவலாளர்கள் தெரிவித்தனர். 

ஆனால் அதனை ஏற்க மறுத்த மக்கள், "அதிகாரிகள் உடனடியாக இங்கு வர வேண்டும்" என்றும், "சேலம் - சென்னை எட்டு வழி சாலை அமைக்கும் பணியை அரசு கைவிட வேண்டும்" என்றும் வலியுறுத்தினர். 

இதனையடுத்து காவலாளர்கள் மற்றும் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் மேற்கொண்ட நீண்ட நேர சமாதானப் பேச்சுவார்த்தைக்கு பிறகு மாடு, ஏர் கலப்பைகளுடன் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து மறியலில் ஈடுபட்ட பனங்காடு கிராம மக்கள், "எருமாபாளையம், பனங்காடு பகுதிகளில் நாங்கள் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு விவசாய தொழில் தான் வாழ்வாதாரம். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கிராமத்திற்கு வந்து 8 வழி பசுமை விரைவு சாலைக்காக நிலம் கையகப்படுத்த சுமார் 400 மீட்டர் தூரத்திற்கு முட்டுக்கல் நட்டு சென்றுள்ளனர். 

100-க்கும் மேற்பட்ட வீடுகளும், விவசாய நிலங்களும் உள்ளன. இதனை கையகப்படுத்தினால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். சேலம் - சென்னை இடையே 8 வழி பசுமை சாலையால் எந்த பயனும் இல்லை. எனவே இதை கைவிட வேண்டும்" என்று அவர்கள் கூறினர்.