சிவகங்கை

சிவங்கையில், காவலர்களின் வாக்கி- டாக்கி உயர்கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநர் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் 78 பேர் பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலர்களின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நேற்று நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில், கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே உள்ள காவல்துறை வாக்கி - டாக்கி உயர்கோபுரத்தில் ஏறி இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார். அப்போது, அவரை கீழிறக்கும் முயற்சியில் ஆட்டோ ஓட்டுநர் சுதன் உதவி செய்தார்.

எனவே, அவரைப் பாராட்டி எஸ்பி.டி.ஜெயச்சந்திரன் பரிசு வழங்கினார். அப்போது, சுதனின் தாயார் உடனிருந்தார்.

இதுமட்டுமின்றி, சிவகங்கையில் ஆறு பேர் கொண்ட ரௌடிக் கும்பலை கைது செய்த சிவகங்கை நகர் காவல் ஆய்வாளர் மோகன் உள்பட 16 காவலாளர்களுக்கும், சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிகளை பிடித்த தனிப்படை காவலாளர்கள் மணிகண்டன், ராஜசேகரன், காவல் ஆய்வாளர்கள் ரவீந்திரன், கீதாலட்சுமி உள்பட 37 காவலாளர்களுக்கும்,

இளையான்குடியில் தகராறில் ஈடுபட்ட வழக்கில் 18 பேரை கைது செய்த காவல் சார்பு ஆய்வாளர்கள் செந்தூர்பாண்டியன், தனிப்பிரிவு காவலாளர்கள் தளபதி, சிவா மற்றும் தேவகோட்டை, கல்லல் பகுதிகளில் வழிப்பறி செய்தவர்களை கைது செய்த காவலாளர்கள் உள்பட மொத்தம் 78 பேருக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார் எஸ்பி டி.ஜெயச்சந்திரன்.