730 kg rice rice was used for smuggling to Kerala Trapped in train station ...
கன்னியாகுமரி
நாகர்கோவில் இரயில் நிலையத்தில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 730 கிலோ ரேசன் அரிசியை அதிகாரிகள் சோதனையின்போது பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு இரயில் நிலையம் அருகில் உள்ள ஊட்டுவாழ்மடம் இரயில்வே கிராசிங் பகுதியில் கேரளா செல்லும் இரயிலில் ரேசன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது என்று அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து அகசுதீசுவரம் வட்ட வழங்கல் அதிகாரி கோலப்பன் தலைமையில், வருவாய் ஆய்வாளர் கோபால் மற்றும் பணியாளர்கள் நேற்று காலை அப்பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு புதர்மண்டிக் கிடந்த ஒரு இடத்தில் சிறு, சிறு பிளாஸ்டிக் சாக்கு மூட்டைகளாக ஏராளமான மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
அந்த மூட்டைகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது அவற்றில் ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. மொத்தம் 32 பிளாஸ்டிக் சாக்கு மூடைகளில் 730 கிலோ ரேசன் அரிசி இருந்தது.
ஆட்கள் நடமாட்டம் இல்லாதபோது இந்த அரிசி மூட்டைகளை இரயில் நிலையத்திற்கு கொண்டுவந்து, கேரளா செல்லும் இரயிலில் ஏற்றிச் செல்ல திட்டமிட்டு கடத்தல்காரர்கள் இரயில் நிலையம் அருகில் உள்ள புதரில் பதுக்கி வைத்திருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகித்தனர்.
அந்த அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, ஜீப்பில் ஏற்றி நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
பின்னர், அவற்றை கோணத்தில் உள்ள அரசு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்தனர்.
