குளச்சலில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 3 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 72 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
குளச்சல், சைமன்காலனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதுகுறித்த புகாரின்பேரில் காவல் துணைக் கண்காணிப்பாளர் வெங்கட்ராமன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில், தனிப்படை காவல்துறையினர், காவல் ஆய்வாளர் சிவராஜ்பிள்ளை உள்ளிட்டோர் குளச்சல், மண்டைக்காடுபுதூர் பகுதியில் ரோந்து சென்றபோது, அவர்களை கண்டதும் 5 பேர் கொண்ட கும்பல் தப்பியோடினர். காவல்துறையினர் அவர்களை விரட்டிச் சென்றனர். இதில் 2 பேர் தப்பிவிட்டனர். மற்ற 3 பேரை பிடித்து விசாரித்ததில், அவர்கள் வேல்குமார் (30), கருமலையான் (40), நாகராஜ் (30) என்பதும், இவர்கள் கம்பம் அருகேயுள்ள தினகரன் நகரைச் சேர்ந்தவர்கள் என்பதும், குளச்சல் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.
இவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து, 72 பவுன் தங்க நகைகளை காவல்துறையினர் கைப்பற்றினர்.
இரணியல் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட அவர்கள் 15 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
