700 பேர் உயிரிழப்பு; உங்கள் நல்லதுக்காகதான் சொல்கிறோம் 'ஹெல்மெட்' போடுங்கள் - காஞ்சிபுரம் எஸ்.பி. அட்வைஸ்...
காஞ்சிபுரத்தில் மூன்று வருடங்களில் 714 பேர் ஹெல்மெட் அணியாததால் இறந்துள்ளனர். எனவே, மோட்டார் சைக்கிள் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாகச் செல்லவேண்டும் என்பதற்காகதான் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கூறுகிறார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் மூன்று வருடங்களில் 714 பேர் ஹெல்மெட் அணியாததால் இறந்துள்ளனர். எனவே, மோட்டார் சைக்கிள் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாகச் செல்லவேண்டும் என்பதற்காகதான் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கூறுகிறார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ்.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், "காஞ்சிபுரம் மாவட்டத்தில், மோட்டார் பைக்கில் செல்லும் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.
காஞ்சிபுரத்தில் நடக்கும் சாலை விபத்துகளில் ஹெல்மெட் அணியாதவர்கள்தான் அதிகம் இறந்துள்ளனர். மாவட்டத்தில் கடந்த மூன்று வருடங்களில் மட்டும் மொத்தம் 714 பேர் ஹெல்மெட் அணியாததால் இறந்துள்ளனர். அதேபோல 1500– க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து உள்ளனர்.
எனவே, பைக் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை தெரிந்துகொள்ள வேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வை வாகன ஓட்டிகளிடம் ஏற்படுத்தி வருகிறோம். பைக் ஓட்டுபவர் மட்டுமல்ல பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.
இந்த விதியை மீறுபவர் மீது மோட்டார் வாகனச் சட்டப் பிரிவு 129–ன் படி வழக்குப்பதிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காஞ்சிபுரத்தில் மட்டும் இதுவரை ஹெல்மெட் அணியாத 42 ஆயிரம் பேருக்கு அபராதம் இடப்பட்டுள்ளது.
அதேபோல கடந்த நான்கு நாள்களில் மட்டும் ஹெல்மெட் இல்லாமல் பின்னால் உட்கார்ந்திருந்த 5 ஆயிரத்து 741 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. மோட்டார் சைக்கிள் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாகச் செல்லவேண்டும் என்பதற்காகதான் இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டினால் அவர்களைப் பிடித்து அபராதம் விதிப்பதோடு, ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து காவலாளர்கள் அவர்களுக்கு பாடம் எடுப்பார்கள். எனவே, வாகன ஓட்டிகள் இந்த நடைமுறைக்கு முழு ஒத்துழைப்புத் தரவேண்டும்" என்று அவர் கூறினார்.