10 மணி வரை தென் மாவட்டங்களை பதம் பார்க்கப் போகும் மழை! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்கள் உள்பட 7 மாவட்டங்களில் இன்று காலை அடுத்த மூன்று மணிநேரத்தில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேற்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அக்டோபர் 2ஆம் தேதி வரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
இந்நிலையில், சென்னை வானிலைய ஆய்வு மையம் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பின்படி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென்மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்துவருகிறது. குறிப்பாக கன்னியாகுமரியில் இடி மின்னலுடன் அடைமழை பெய்து நீர்நிலைகள் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.