சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் இதுவரைக்கும் 61 ஆயிரம் குழந்தைகளுக்கு தட்டம்மை, ரூபெல்லா நோய்க்கான தடுப்பூசி போட்டுள்ளோம். இந்த ஊசி போடுவதால் எந்தவித பாதிப்பும் வராது. சமூக வளைத்தளங்களில் இந்த தடுப்பூசி குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் மலர்விழி தெரிவித்தார்.

சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி குறித்த கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியயர் மலர்விழி தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் சௌந்தரராஜன், இந்திய மருத்துவ கழக தலைவர் மருத்துவர் சுரேந்திரன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் யசோதாமணி, அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமையாசிரியர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்கள், இந்திய மருத்துவ கழக மருத்துவர்கள், குழந்தைகள் நல மருத்துவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டம் முடிந்த பின்பு ஆட்சியர் மலர்விழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“கடந்த 6-ஆம் தேதி தொடங்கிய தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி முகாம் வருகிற 28-ஆம் தேதி வரை நடக்கிறது.

9 மாதம் முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு இந்த ஊசி போடப்பட்டு வருகிறது. ஏற்கனவே தட்டம்மை தடுப்பூசி அரசால் போடப்பட்டுள்ளது. தற்போது, தட்டம்மையுடன் சேர்த்து ரூபெல்லா என்ற தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இது புதிய ஊசி அல்ல. இவை ஏற்கனவே தனியார் மருத்துவமனைகளில் போடப்பட்டவை தான்.

சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 61 ஆயிரம் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தட்டம்மையால் இறப்பு விகிதம் குறைந்துள்ளதை போன்று ரூபெல்லாவால் குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவி குறைபாடுகளை ஒழிக்கும் நோக்கத்தில் தான் இந்த ஊசி போடப்படுகிறது.

கருவில் வளரும் குழந்தைகளுக்கு காது கேளாமை, பார்வை குறைபாடு, இருதயத்தில் ஓட்டை, வளர்ச்சி குறைபாடு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. இவை வெளியில் தெரிவதில்லை. இதுபோன்ற பிறவி குறைபாடுகளை தடுக்கும் வகையில் தான் உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையின் பேரில் இந்த ரூபெல்லா ஊசி போடப்படுகிறது.

இந்த ஊசி போடுவதால் எந்தவித பாதிப்பும் வராது. சமூக வளைத்தளங்களில் இந்த தடுப்பூசி குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இதனால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு தயக்கம் காட்டி வரும் சூழ்நிலை இருந்து வருகிறது.

தேசிய தடுப்பூசி திட்ட வழிகாட்டுக்குழுவின் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த தடுப்பூசியானது 100 சதவீதம் பாதுகாப்பானதாகும். எனவே 9 மாதம் முதல் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் விடுபடாத வகையில் 100 சதவீதம் இந்த தடுப்பூசியை போடவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.