தேனி

டி.டி.வி.தினகரனுக்கு 60-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள், 8 அமைச்சர்கள் ஆதரவாக உள்ளனர் என்று தேனியில் நாஞ்சில் சம்பத் பேட்டியளித்துள்ளார்.

டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் தேனியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில், “சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை கட்சியில் இருந்து விலக்கி வைக்க யாரோ போட்ட கட்டளையை நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் துடிக்கிறார்கள்.

அவமானப்படுத்துவதன் மூலம் தினகரனை அழுக்காக்க நினைக்கிறார்கள். அவர் தூசிகள் படியாத வானம். அவரை அழுக்காக்க முடியாது.

இந்த குளறுபடியான நேரத்தில் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புவோம். ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்திற்கு செல்வோம். எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்பதை 21 எம்.எல்.ஏ.க்கள் வெளிப்படையாக அறிவித்துள்ளார்கள். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகும். 60-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள், 8 அமைச்சர்கள் தினகரனுக்கு ஆதரவாக உள்ளனர்.

ஒரு நிமிடம் கூட முதலமைச்சராக நீடிக்க எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை. அவர் உடனே பதவி விலக வேண்டும்.

எடப்பாடி பழனிசாமியை கட்சியில் இருந்து நீக்கியது தினகரனின் துணிச்சலான முடிவு. தமிழக அரசியலில் ஒரு ஆண்பிள்ளை இருக்கிறார் என்றால் அது தினகரன் தான்.

எடப்பாடி பழனிசாமியின் ராஜதந்திரமற்ற செயல்களால் இந்த ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. சட்டசபையில் அவர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற நிலைமை வந்தால் ஆட்சி கவிழும்.

ஓ.பன்னீர்செல்வத்தை துணை முதலமைச்சர் ஆக்கியுள்ளதன் மூலம் எடப்பாடி பழனிசாமி மிகப்பெரிய பாவம் செய்திருக்கிறார்” என்று அவர் பேசினார்.