திமுக ஒன்றிய செயலாளர் மிரட்டல்.? அதிரடியாக பதவியை ராஜினாமா செய்த 6 வார்டு உறுப்பினர்கள்
மதுரையில் ஊராட்சி நிர்வாகத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரான திமுக ஒன்றிய செயலாளர் தலையீடு செய்து மிரட்டுவதாக கூறி 6 வார்டுகளை சேர்ந்த உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் ராஜினாமா கடிதம் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊராட்சியில் முறைகேடு-ஒன்றிய செயலாளர் மிரட்டல்
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு கோவிலாங்குளம் ஊராட்சியின் ஊராட்சிமன்ற தலைவராக ஜெயந்தி என்பவர் பதவி வகித்துவருகிறார். இவரது கணவர் முத்துராமன், திமுக செல்லம்பட்டி ஒன்றிய செயலாளரும், மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவராகவும் உள்ளார். இந்தநிலையில் திமுக ஒன்றிய செயலாளர் தங்களை மிரட்டுவதாக கூறி வார்டு 1 உறுப்பினர் தனம், வார்டு 2 உறுப்பினர் ஜெயலட்சுமி, வார்டு3 உறுப்பினர் ஜெயக்கொடி, வார்டு 4 உறுப்பினர் பஞ்சு, வார்டு 9 உறுப்பினர் தங்கசாமி, வார்டு 12 உறுப்பினர் பாண்டியராஜன் ஆகியோர் இன்று தங்களது வார்டு பதவிகளை ராஜினாமா செய்வதாக கூறி ராஜினாமா கடிதத்தை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் கொடுத்தனர்.
ராஜினாமா செய்த வார்டு உறுப்பினர்கள்
இந்த சம்பவம் தொடர்பாக மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குனர் தலைமையில் உரிய விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வார்டு உறுப்பினர்கள், கோவிலாங்குளம் ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் 100 நாட்கள் வேலை திட்டம், சாலை அமைத்தல் உள்ளிட்ட அரசு திட்ட பணிகளில் முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றம்சாட்டினர். மேலும் விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற லஞ்சம் பெறப்படுவதாகவும் வார்டு உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக பேசியதால் தங்களை தகுதி நீக்கம் செய்வதாக ஊராட்சிமன்ற தலைவரின் கணவரும், திமுக செல்லம்பட்டி ஒன்றிய செயலாளரும் முத்துராமன் மிரட்டுவதாக கூறினர்.
இதையும் படியுங்கள்
புதுக்கோட்டையில் 3 குழந்தைகளுடன் நீரில் மூழ்கிய தாய்; சோகத்தில் ஆழ்ந்த கிராமம்