6 months licence ban

சாலை விதிகளை மீறினால் ஓட்டுனர் உரிமம் 6 மாதத்திற்கு ரத்து செய்யப்படும் என போக்குவரத்து ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வாகன ஓட்டிகள் வண்டிகளில் செல்லும்போது அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என ஏற்கனவே போக்குவரத்து துறையினர் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.

இதனிடையே போக்குவரத்து விதிகள் மீறுபவர்களை பிடித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் அவ்வபோது அபராதம் விதித்து வருகின்றனர்.

மேலும் சிலர் பணத்தை வாங்கி அபராத தொகையில் வைக்காமல் தன் பாக்கெட்டில் போடுவதையும் வழக்கமாக வைத்து வருகின்றனர்.

அதன்படி நேற்று கூட சென்னை கூடுவாஞ்சேரியில் இதுபோன்ற நிகழ்வு ஒன்று அரங்கேறியது. அதுகுறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இந்நிலையில், தலைமை செயலாளர், டிஜிபி, போக்குவரத்து செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய போக்குவரத்துதுறை ஆணையர் உச்சநீதிமன்ற சாலை பாதுகாப்பு குழு அறிவுறுத்தலின் பேரில் புதிய நடவடிக்கை ஒன்று எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சாலை விபத்துகளை தடுக்க புதிய உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும், சாலை விதிகளை மீறினால் 6 மாதத்திற்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், சிவப்பு விளக்கை மீறுவது, அதிக பாரம் ஏற்றுவது, சரக்கு வாகனத்தில் மக்களை ஏற்றி செல்வது, தலைகவசம் அணியாமல் இருப்பது, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல், மது போதையில் வாகனம் ஓட்டுதல் ஆகிய விதிமீறலாகும் என தெரிவித்தார்.