Asianet News TamilAsianet News Tamil

தொடர்ந்து ஐந்தாவது நாளாக மீன்பிடிக்க தடை; ஆயிரக்கணக்கில் மீனவர்கள் பாதிப்பு; நிவாரணம் கேட்டு கோரிக்கை...

5th day Continues ban for fishing Thousands of fishermen affected Request for relief ...
5th day Continues ban for fishing Thousands of fishermen affected Request for relief ...
Author
First Published Mar 15, 2018, 10:47 AM IST


இராமநாதபுரம்

தொடர்ந்து ஐந்தாவது நாளாக மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் வேலை இழந்துள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு அரசு புயல்கால நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  

இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் பாதுகாப்பு கருதி இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

கடந்த 10-ஆம் தேதியில் இருந்து இராமேசுவரம், பாம்பன் பகுதிகளிலும் 900-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும், 500-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் மீன்பிடிக்க செல்லவில்லை. 

இந்திய பெருங்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் இராமேசுவரம், தனுஷ்கோடி கடல் பகுதி தொடர்ந்து கடல் கொந்தளிப்பாகவே காணப்படுகிறது. 

இதேபோல பாம்பன் துறைமுக அலுவலகத்தில் நேற்று 2-வது நாளாக 3-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது. 

புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையிலும் மழை பெய்யவில்லை. மாறாக இராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.

இதேபோல் 5-வது நாளாக நேற்றும் மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்படாததால் இராமேசுவரம், பாம்பன் பகுதியில் ஏராளமான மீன்பிடி படகுகள் கரையோரத்தில் உள்ள கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

மேலும், நாட்டுப்படகு மீனவர்கள் யாரும் தடையை மீறி நடுக்கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுவிடாமல் இருப்பதற்காக அதை கண்காணிக்கும் வகையிலும் கடந்த 2 நாட்களாக இராமேசுவரம் கடல் பகுதியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான அதிவேக ரோந்து கப்பல் ஒன்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. 

அதனைத் தொடர்ந்து ஐந்து நாள்களாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் வேலை இழந்துள்ளனர். தொடர்ச்சியாக மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டதால் "மீனவர்களுக்கு அரசு புயல்கால நிவாரண தொகை வழங்க வேண்டும்"என்று மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios