5000 ஆண்டுகள் முந்தையது.. தமிழ்நாட்டில் சிந்து சமவெளி நாகரிகத்திற்கு இணையான இரும்புக்காலம்.. புதிய தகவல்
சிந்து சமவெளி நாகரிகத்திற்கு இணையாக தமிழ்நாட்டில் இரும்புக் கால நாகரிகம் இருந்ததற்கான புதிய ஆதாரங்கள் சிவகளை அகழாய்வில் கிடைத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளையில், கடந்த 2 ஆண்டுகளாக தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றது. இந்த அகழாய்வில் முதுமக்கள் தாழிகள், மண் பாண்டங்கள், பழங்கால மற்றும் இடைக்கால கருவிகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் இரும்புக் கருவிகளும் அதிகளவில் கிடைத்தன. குறிப்பாக வாள்கள், கூர்முனை கருவிகள், கத்திகள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இரும்பு ஆயுதங்கள் கிடைத்தன. மேலும் இரும்பு காலக்கட்டத்திற்கு முந்தைய காலக்கட்டத்தில் இந்த பகுதியில் மக்கள் வாழந்ததற்கான சுவடிகள் கிடைத்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பொருட்களின் அடிப்படையில் சிவகளை 3,000 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் சிந்துசமவெளி நாகரித்திற்கு இணையாக தமிழ்நாட்டில் இரும்புகாலம் இருந்ததற்கான புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளது. சிவகளையில் கி.மு 2500 முதல் கி.மு 3000 வரை இருந்த பொருட்கள் கிடைத்துள்ளன. அதாவது இன்றிலிருந்து சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பே அந்த தமிழ்நாட்டில் இரும்புக்காலம் இருந்துள்ளது. சிந்து சமவெளி நாகரிகம் கி.மு 3300-ல் இருந்து கி.மு 1300 வரை இருந்தது. ஆனால் கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் நடந்த அகழாய்வில் கிடைத்த பொருட்கள் கி.மு 2172-ம் ஆண்டில் இருந்தது என்று கண்டறியப்பட்டது.
தமிழ்நாடு தொல்லித்துறை ஆலோசகரும், மூத்த ஆய்வாளருமான கே. ராஜன் இதுகுறித்து பேசிய போது “ லக்னோவில் உள்ள பீர்பால் கற்கால ஆய்வகம், அகமதாபாதி உள்ள ஆய்வகம் என பல ஆய்வகங்களில் கி.மு 2500 மற்றும் கிமு 3000 இடையிலான காலக்கட்டத்தில், சிந்து சமவெளி நாகரிகத்திற்கு இணையான சமகால நாகரிகம் தமிழ்நாட்டில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
சிந்து சமவெளி நாகரிக மக்கள் செம்பு பொருட்களை பயன்படுத்தினர். ஆனால் இங்கு இரும்பு பொருட்கள் கிடைத்துள்ளன. எனவே இரும்பு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன என்பதை நிரூபிக்க இரும்பு உலைகளை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே சவாலான பணி.” என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சிந்து சமவெளி நாகரிகத்துடன் தொடர்பை கண்டறிய சுவற்றில் எழுதப்பட்ட எழுத்துக்கள், ஓவியங்களான கிராஃப்டி குறியீடுகளை ஆய்வு செய்து வருகிறது. தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கிராஃப்டி குறியீடுகளை, புரிந்து கொள்ள முடியாது சிந்து சமவெளி நாகரிக எழுத்துக்களுடன் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய ராஜன் “ தமிழ்நாட்டில் தற்போது 10,000 கிராஃப்டி குறியீடுகளில் 8000 ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கிராஃப்டி குறியீடுகள் சிந்து சமவெளி நாகரிகத்தில் இருந்து வந்ததா இல்லையா என்பது இந்த ஆய்வில் தெரியவரும். தமிழ்நாட்டில் மட்டுமே இதுவரை 10,000-க்கும் மேற்பட்ட கிராஃப்டி குறியீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிந்து சமவெளி நாகரிகத்துடன் தொடர்புடைய கலாச்சார ஒற்றுமையயும் நாங்கள் கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.