பெரம்பலூர்

பெரம்பலூரில் கடந்த 15 நாள்களில் குட்டை, கிணறு உள்ளிட்ட நீர்நிலைகளில் மூழ்கி 5 சிறுவர்கள் பலியாகி உள்ளதால் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இதனைத் தடுக்க முதல்கட்டமாக குட்டை, கிணறு உள்ளிட்ட இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்க உள்ளனர் காவலாளர்கள்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள தொண்டப்பாடி, பாடாலூர் அருகே உள்ள நாரணமங்கலம், காரை, தெரணி ஆகிய பகுதிகளில் கல்குவாரி குட்டை, மீன்வளர்ப்பு குட்டை, கிணறு உள்ளிட்ட நீர்நிலைகள் உள்ளன,

இந்த நீர்நிலைகளில் மூழ்கி கடந்த 15 நாள்களில் பள்ளி சிறுவர்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோடை வெயில் வாட்டி வதைப்பதன் காரணமாக நண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது இதுபோன்ற உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. முக்கியமாக நீச்சல் தெரியாததாலும், சேற்றுக்குள் சிக்கியும் இந்தச் சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவங்கள் பெரம்பலூர் மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், கல்குவாரி குட்டை, மீன்வளர்ப்பு குட்டை, கிணறு உள்ளிட்ட நீர்நிலைகளின் அருகே எச்சரிக்கைப் பலகை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என்று காவலாளர்கள் நடவடிக்கை எண்ணியுள்ளனர்.

இதுகுறித்து காவல் உயர் அதிகாரி ஒருவர் கூறியது:

“சிறுவர்கள் விளையாட்டாக ஆபத்தை உணராமல் குட்டைகளில் உள்ள தண்ணீரில் குளிக்க செல்கின்றனர்.

தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் குட்டை, கிணறு உள்ளிட்டவற்றில் மூழ்கி 5 சிறுவர்கள் பலியானது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

எனவே, பெற்றோர்கள் கோடை விடுமுறையில் தங்களது குழந்தைகளை கண்காணித்து இதுபோன்ற நீர்நிலைகளில் குளிக்கச் செல்ல வேண்டாம் என்று அன்போடு அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். மேலும், தங்களது குழந்தைகளுக்கு முறைப்படி நீச்சல் பயிற்சி அளிக்க வேண்டும்.

முதல்கட்டமாக குட்டை, கிணறு உள்ளிட்ட இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்க நடவடிக்கை எடுத்து உள்ளோம்” என்றுக் கூறினார்.