தஞ்சை தொகுதியில் வாக்காளர் பட்டியலில் புதிதாக 488 பேர் சேர்க்கப்பட்டு, 5 பேர் நீக்கி தற்போது 2 இலட்சத்து 68 ஆயிரத்து 516 வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர் என்று ஆட்சியர் அண்ணாதுரை கூறினார்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை வாக்காளர் பட்டியலை அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியர் அண்ணாதுரை புதன்கிழமை வெளியிட்டார்.
பின்னர் ஆட்சியர் அண்ணாதுரை செய்தியாளர்களிடம், “தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 29–ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 1 இலட்சத்து 29 ஆயிரத்து 913 ஆண் வாக்காளர்களும், 1 இலட்சத்து 38 ஆயிரத்து 102 பெண் வாக்காளர்களும், 18 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 இலட்சத்து 68 ஆயிரத்து 33 வாக்காளர்கள் இடம் பெற்று இருந்தனர். அதன் பின்னர் வாக்காளர் பட்டியலில் தொடர் திருத்த பணி மேற்கொள்ளப்பட்டது.
இதன் மூலமாக கடந்த மாதம் 22–ஆம் தேதி வரை நேரடியாக 86 விண்ணப்பங்களும், ஆன்லைன் மூலமாக 2 ஆயிரத்து 39 விண்ணப்பங்களும் பெறப்பட்டன. அதன் அடிப்படையில் வாக்காளர் சேர்த்தல், திருத்தம், நீக்கல் மேற்கொள்ளப்பட்டு புதிதாக 235 ஆண் வாக்காளர்களும், 253 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 488 வாக்காளர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டன. 5 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டன.
தற்போது தஞ்சை சட்டமன்ற தொகுதி துணை வாக்காளர் பட்டியலில் ஆண்கள் 1 இலட்சத்து 30 ஆயிரத்து 146 ஆண் வாக்காளர்களும், 1 இலட்சத்து 38 ஆயிரத்து 352 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 18 வாக்காளர்களும் என மொத்தம் 2 இலட்சத்து 68 ஆயிரத்து 516 வாக்காளர்கள் உள்ளனர்.
மேலும் தஞ்சை தாசில்தார் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் துணை வாக்காளர் பட்டியல் வாக்காளர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
தஞ்சை தொகுதியில் தேர்தலை கண்காணிக்க 27 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றக்கூடிய அலுவலர்களுக்கு முதல்கட்ட பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரியில் நடைபெறுகிறது. தஞ்சை தொகுதியில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கார்த்திகேயன் (அ.தி.மு.க.), து.செல்வம் (தி.மு.க.), மோகன்ராஜ் (காங்கிரஸ்), அரங்கராஜன் (பகுஜன்சமாஜ்), கரிகால்சோழன் (தேசியவாத காங்கிரஸ்), அடைக்கலம் (தே.மு.தி.க.) மற்றும் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள், தேர்தல் தனி தாசில்தார் இராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
