40 people arrested for protest for emphasis Tamil Nadu killing plans

தஞ்சாவூர்

தமிழகத்தை பாலைவனமாக்கும் மீத்தேன், ஐட்ரோ கார்பன், நியூட்ரினோ திட்டங்களை கைவிட மத்திய அரசை வலியுறுத்தி தஞ்சாவூரில் போராடிய இளைஞர் பெருமன்றத்தினர் 40 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

"காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். 

ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். 

தமிழகத்தை பாலைவனமாக்கும் மீத்தேன், ஐட்ரோ கார்பன், நியூட்ரினோ திட்டங்களை கைவிட வேண்டும். 

ஆற்று மணல், தாதுமணல், இயற்கை வளங்களின் கொள்ளையை தடுக்க வேண்டும். 

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் முன்பு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்வக்குமார் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர்கள் சக்திவேல், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமானோர் பங்கேற்று பல்வேறு முழக்கங்களை எழுப்பினர். 

பின்னர் அங்கிருந்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஊர்வலமாக புறப்பட்டு பழைய ஆட்சியர் அலுவலகமான பனகல் கட்டிடத்தை முற்றுகையிடுவதற்காக வந்தனர். இவர்கள் யாரும் பனகல் கட்டிடத்திற்குள் நுழைந்துவிடக்கூடாது என்பதற்காக நுழைவு வாயில் கதவை கிழக்கு காவலாளர்கள் பூட்டி இரும்பு கம்பிகளாலான தடுப்புகளை ஏற்படுத்தியிருந்தனர். 

ஊர்வலமாக வந்தவர்கள் பனகல் கட்டிடம் முன்பு வந்தபோது அவர்களை காவலாளர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் பனகல் கட்டிடத்தை முற்றுகையிட்டு, தரையில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். 

பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை காவலாளர்கள் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.